மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வைத்திய பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
புதிய இணைப்பு
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளின் போது, சாரதியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததை தடயவியல் வைத்திய பரிசோதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
உயிரிழந்தவர்களின் விபரம்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்

