பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரையும் ரூ. 25,000 ரொக்க பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்களுடனும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ஜெஃப்ரி முகமது மற்றும் முக்கிய தொழிலதிபராகிய முகமது இன்ஃபார்ட் ஆகியோரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை மேலும் காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவத்தில் முதல் சந்தேகநபர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் போதைப்பொருள் சட்டம் மற்றும் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் 6.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வங்கியில் வைப்பு செய்துள்ளதாகவும் அரச சட்ட ஆலோசகர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அம்பலமாகியுள்ள மாபெரும் மோசடி
நாட்டிலிருந்து 190 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது இந்த மாபெரும் மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்த வழக்கில் முதல் சந்தேகநபர் ஜெஃப்ரி முகமது ஆவார். அவர் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய மேலும் 5 நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை வழங்கியுள்ளதுடன், இரண்டு முக்கிய சந்தேகநபர்களையும் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.
You May Like This..