மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி பணம் வசூலித்த இளைஞர் கைது..!
மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி, பொய்யாகப் பணம் வசூலித்த 23 வயது இளைஞர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மஹியங்கனை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி, சம்பந்தப்பட்ட குழந்தையின் புகைப்படத்தைக் காட்டிப் போலி டிக்கெட்டுகளை விற்று, சந்தேக நபர் பணம் வசூலித்து வந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 2300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படம்
இவ்வாறு பணத்தை வசூலிப்பதற்காக, கண்டி - திகனாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவர் பயன்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸாரின் விசாரணையின் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த மாற்றுத்திறனாளி குழந்தை தற்போது குணமடைந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், குறித்த குழந்தையின் உறவினர்கள் மஹியங்கனைக்கு வந்த பொழுது அவர்களுக்கு உதவுவதாக கூறி, உறுதியளித்து குழந்தையின் புகைப்படத்தையும் டிக்கெட்டுகளையும் பெற்றிருப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் தொட்டவத்தை பகுதியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு எதிராக நீதிமன்றங்களால் 10 பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.