வெளிநாடு சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! 3 ஆண்டுகளாகத் தீவில் தவிக்கும் இலங்கைப் பெண்
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் இடைநிலை விசா நிராகரிப்புகளால், குக் தீவுகளில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வரும் இலங்கைப் பெண் ஒருவரை மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
50 வயதான ருசிரா ரணசிங்க என்ற பெண், தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி நெருக்கடி
2018ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, தனது சிறிய ரி-ஷர்ட் தொழிற்சாலையை மூடிவிட்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார். முதலில் ஹொங்கொங்கில் பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றிய அவர், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்குச் சென்று புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதன்போது, குடிவரவு ஆலோசனை நிறுவனமொன்றின் அறிவுறுத்தலின் பேரில், தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி வெளிநாட்டிலிருந்து வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காகக் குக் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.

எனினும், அவரது வேலைவாய்ப்பு விசா நிராகரிக்கப்பட்டதுடன், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதால் ஏற்கனவே பெற்றிருந்த புகலிடத்துடன் தொடர்புடைய விசா நிபந்தனைகளையும் அவர் மீறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஊடாகப் பயணிப்பதற்காக மூன்று தடவைகளும், அவுஸ்திரேலியா ஊடாகப் பயணிப்பதற்காக நான்கு தடவைகளும் இடைநிலை விசாவுக்கு விண்ணப்பித்த போதிலும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
விசா விண்ணப்பங்கள்
ஹவாய் மற்றும் தஹித்தி ஊடாகப் பயணிக்க மேற்கொண்ட முயற்சிகளும் விசா மற்றும் உயிரியல் அடையாளப் பதிவு தேவைகள் காரணமாகத் தோல்வியடைந்துள்ளன. நவம்பர் மாதம் தனது ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், எப்படியாவது நாடு திரும்ப விரும்புவதாக ருசிரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குக் தீவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் இலவசமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களும் உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மறுபுறம், நியூசிலாந்து இடைநிலை விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக, அவர் உண்மையாகவே அந்நாட்டின் ஊடாக வேறு இடத்திற்குப் பயணிக்க விரும்புகிறார் என்பதில் அதிகாரிகளுக்குத் திருப்தி ஏற்படவில்லை என நியூசிலாந்து குடிவரவுத் திணைக்களம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு அவரைத் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளது. வெலிங்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து தீர்வொன்றைக் காண முயற்சித்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri