அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! வாக்குமூலத்தில் வெளியான தகவல்
நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது
வாக்குமூலத்தில் வெளியான தகவல்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாம் சந்தேகநபர் வணிக வங்கியின் முகாமையாளராகவும், மூன்றாம் சந்தேகநபர் வணிக வங்கியின் இளநிலை நிறைவேற்று அதிகாரியாகவும், நான்காம் மற்றும் ஐந்தாம் சந்தேகநபர்கள் வணிக வங்கியின் இளநிலை அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபர் நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்கு சென்றுள்ளதாகவும் அதிகாரி நீதிமன்றத்தில் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நாட்டிலிருந்து பணம் வெளியேறிய போதிலும், நாட்டிற்கு அத்தகைய பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சட்டத்தரணிகள் விடுத்துள்ள கோரிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான பில்லியன் கணக்கிலான ரூபா மோசடி செய்வது இவ்வாறான இளநிலை அதிகாரிகளின் கடமை வரம்பிற்கு அப்பாற்பட்ட என்றும் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்