யாழ். வருகையை வரவேற்கும் வல்வை வளைவு
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி செல்லும் வீதியில் “யாழ்.வல்வை வளைவு” வலிகாமத்தினை வடமராட்சியில் இருந்து பிரித்து இரு இடங்களையும் எல்லைப்படுத்துகின்றது.
மேலும், வடமராட்சிக்கு வருவோரை யாழ்.வல்வை வளைவு வரவேற்று நிற்கின்றது.
A9 வீதி வழியே யாழ்ப்பாணம் செல்லும் போது யாழ்.வளைவு நம்மை வரவேற்பதனை இது நினைவுபடுத்துகின்றது என சுற்றுலாப் பயணிகள் பலர் குறிப்பிடுகின்றனர்.
நகரங்களுக்குள் நுழையும் போது வீதிகளில் உள்ள வரவேற்பு வளைவுகள் மக்கள் மனங்களில் ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்துகின்றன.
மக்களின் மனங்களிலும் மண் பற்றின் அடையாளமாக வளைவுகளின் நினைவுகள் இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
யாழ்.வல்வை வரவேற்பு வளைவு
யாழ்ப்பாணத்தில் உள்ள வீதி வளைவுகளில் தமிழர் பண்பாட்டியல் மேலோங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வளைவுகளில் தமிழ் வாசகங்களைப் பதிவிடுவது மகிழ்வுக்குரிய செயற்பாடு என தமிழாசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழ் பாரம்பரியம் பற்றி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணிக்கையில் AB20 வீதி வழியில் 20 வது கிலோமீற்றர் கல்லை கடந்து செல்லும் போது வல்வை வளைவை எதிர்கொண்டு பயணிக்க நேரிடும்.
வீதியின் ஒரு பக்கத்தில் மட்டும் நிறுவப்பட்டுள்ள இந்த வளைவு தமிழியல்பை கொண்டு காட்சியளிக்கின்றது.
காட்சித் தோற்றத்தில் பிரமிப்பை ஏற்படுத்தி ஆனந்தத்தை பெருக்கி மகிழ்வை ஊற்றெடுக்க வைத்து விடுகின்றது.
சூரியன், பனைமரம், ஔவையாரின் "வரப்புயர நீர் உயரும் " என்ற வாசகமும் இருக்கின்றது. மேலும், வளைவின் நிறமும் கடல்சார் நீலநிறமாக இருக்கின்றது.
வரப்புயர நீர் உயரும் என்ற வாசகம் தமிழ் இலக்கிய வாசனையை ஏற்படுத்தி விடுகின்றது. அதியமான் என்ற பாண்டிய மன்னனை வாழ்த்திப் பாடுவதற்கு தமிழ் புலவர் ஔவையாரினால் "வரப்புயர நீர் உயரும்" என்ற பாடல் பாடப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வானுயர வளரும் பனையினையும் குறியீடாக கொண்டு வல்வை வளைவு அமைந்துள்ளது. வளைவைப் பார்க்கும் போது யாழ்ப்பாணத்தின் பனை வளத்தினை அது நினைவுபடுத்துகின்றது.
பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தாயக அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: தமிழ் கட்சிகளிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
வளைவின் தூணுடன் இணைக்கப்பட்ட சுவரின் முன்பக்கத்தில் "உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். வடமராட்சி மக்கள்" எனவும் "நன்றி.மீண்டும் வருக.வடமராட்சி மக்கள்" என பின் பக்கத்திலும் குறிக்கப்பட்டு இருப்பதனையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
யாழ்.வல்வை வளைவினையிட்டு கருத்திடும் மக்களிடையே அதனைப் பாராட்டிப் புகழுதலை அவதானிக்க முடிகின்றது.
மாற்றம் சில வேண்டும்
யாழ்.வல்வை வளைவின் மீதான அவதானிப்புக்கள் பல செயற்பாட்டு விடயங்களில் நம்மை கவனமெடுக்கச் செய்து விடுகின்றது என யாழ் வடமராட்சியைச் சேர்ந்த கல்விப் புலமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
வரவேற்பு வளைவுகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியவையாகவே இருக்கின்றன. வருவோரை வரவேற்கும் தமிழரின் உயர்ந்த பண்பாட்டை அவை வெளிப்படுத்தி நிற்கின்றன.
யாழ். வல்வை வளைவின் முன் பின் பக்கங்களில் எழுதப்பட்டுள்ள குறிப்பில் விடைபெறுவதற்கான வாசகங்களும் வரவேற்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.
இது மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதும் வளைவைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தினை அழகுபடுத்தியிருக்கலாம் என்பதும் சுட்டிக்காட்டக்கூடியதாகும்.
யாழ்.வல்வை வளைவை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜனால் திறந்து வைக்கப்பட்டது என குறிக்கப்பட்டுள்ளது. திறந்து வைக்கப்பட்ட நாள் 2019 எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் திறந்து வைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் திறந்து வைக்கப்பட்ட நாள், மாதம் குறிக்கப்படவில்லை. ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை செயற்பாட்டு நிறைவை பார்ப்போருக்கு வழங்காது எனவும் அந்தப் பயணி மேலும் குறிப்பிட்டிருந்தார்.
வளைவில் சிலையாக இருக்கும் பனை மரத்தினை கருத்திலெடுத்து யாழ்.வல்வை வரவேற்பு வளைவினைச் சூழ வீதியின் இரு பக்கங்களிலும் பனைமரங்களை நாட்டி பனைமரச் சோலையாக அந்த இடத்தினை மாற்றியிருக்கலாம் என்ற ஆதங்கமும் பயணிகள் சிலரால் வெளியிடப்பட்டதும் நோக்கத்தக்கது.
யாழ்.வரவேற்பு வளைவு
A9 வழியே யாழ்ப்பாணத்திற்கு உள் நுழையும் இடத்தில் யாழ்.வரவேற்பு வளைவு இருக்கின்றது. அந்த வளைவினைக் கடந்து செம்மணி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் போது புதிய யாழ்.வரவேற்பு வளைவினைக் காணலாம்.
இவ்விரு யாழ் வரவேற்பு வளைவுகளும் தமிழ் பண்பாட்டை எடுத்தியம்பியவாறு இருப்பதனை அவதானிக்கலாம்.
இரண்டாவது யாழ்.வரவேற்பு வளைவில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகமாக இருப்பதனையும் குறிப்பிடலாம்.
மாவீரர் நாள் வளைவுகள்
விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்களின் போது வீதிகள் அலங்கரிக்கப்படும்.அந்த அலங்கரிப்பின் ஒரு பகுதியாக வீதிகளுக்கு குறுக்காக வளைவுகள் வைக்கப்பட்டிருக்கும்.
இதன்படி வளைவுகளில் மாவீரர் நாள் கார்த்திகை 27 என எழுதப்பட்டிருக்கும் என 1995 ஆம் ஆண்டுக்கு முன்னரான யாழ்ப்பாணத்து வீதிகளில் இருந்த வளைவுகள் பற்றிய நினைவுகளை ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும், அன்றும் இன்றும் நுழைவாயில்களில் வளைவுகளும் அதில் பெயர்க் குறிப்புக்களும் இருக்கின்றன.வளைவுகள் நல்ல வரவேற்பு கோபுரங்களாக இருக்கின்றன.
இதற்கமைய ஆலயங்களில் இராஜ கோபுரங்கள் அமைப்பதில் இருந்து பரிணமித்தவையாகவே வரவேற்பு வளைவுகள் இருக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏதோவொரு முறையில் வரவேற்பு வளைவுகள் தமிழர்களிடையே தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஈழத்தின் பல இடங்களில் வளைவுகள் அமைப்பது தொடர்பில் சமூகங்களுக்கிடையே சச்சரவுகளும் ஏற்பட்டதனை இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
யாழ்ப்பாண நிலத்துண்டுகள்
யாழின் நிலப்பகுதிகளில் மூன்று பிரதான நிலத்து துண்டுகளை அவதானிக்கலாம். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி என நிர்வாகவியல் பிரிவுகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமத்தில் இருந்து வடமராட்சிக்கு செல்லும் ஒரு பாதையாக பருத்தித்துறை யாழ்ப்பாண பாதை அமைந்துள்ளது. AB20 என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வீதியின் வழியிலேயே வலிகாமம் வடமராட்சி எல்லையில் யாழ்.வல்வை வளைவு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |