கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! வீதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு - கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் ஊடக அறிக்கை
குறித்த போராட்டத்தின் ஊடக அறிக்கையை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். அவை பின்வருமாறு,

இன்று 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழ் மாணவர்களும், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளும், தமிழ் சமூக அமைப்பு களும், தமிழ் மக்களுமாக ஒன்றிணைந்து ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என பிரகடனப்படுத்தி பேரெழுச்சியாக இன்று தாயகத்தின் கிளிநொச்சி, மற்றும் மட்டக்கிளப்பிலும் ஒன்றாக திரண்டிருக்கின்றோம்.
ஈழத் தமிழர்களாகிய நாம் தாயக தேசியம், தன்னாட்சி உரிமைக்காக உரித்துடைய ஒரே தேசிய இனம் என்பதை உலகுக்கு மீண்டும் பிரகடனப்படுத்துகின்றோம்.
வரலாற்று உண்மை
வட்டுக்கோட்டை தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக, மீண்டும் ஒரே தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நாம் திரண்டுள்ளோம்.

இலங்கை வரலாற்றில் தமிழர்களும், சிங்களவர்களும் தம்மைத்தாமே ஆழும் சுயாதீன இராட்சியங்களை கொண்டிருந்தனர். காலனித்துவ ஆட்சியாளர்களான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்கள். தங்களுடைய சுமார் 300 வருட ஆரம்ப ஆட்சி காலத்தில் சிங்கள இராட்சியங்களையும், தமிழ் இராட்சியங்களையும் தனித்தனியாக நிர்வகித்து வந்தனர்.
1833 ஆம் ஆண்டு ஹோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தம்முடைய நிர்வாக நடைமுறையை இலகுபடுத்துவதற்காக சிங்கள இராட்சியங்களும், தமிழ் இராட்சியங்களும் பிரித்தானியர்களால் இணைக்கப்பட்டது, என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.