ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்: யாழில் பிரதி அமைச்சர் கூறியுள்ள விடயம்
குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழி்லாளர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது நேற்றைய தினம் (25.06.2025) காலை யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து
கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றுகையில்,
கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான முடியுமான உயர்ந்த பட்ச தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம்.
நாடுதழுவிய ரீதியாக குறிப்பாக பிரதானமான கடல்வளங்களை அண்டிய 15 மாவட்டங்களில் கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடத்தி பிரச்சினைகளை ஆராயப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது கூட்டம். இக்கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நடத்தப்படவுள்ளது. மூன்று வார முன்னறிவித்தலின் அடிப்படையில் கூட்டம் நடத்தப்படும்.
கூட்டத்திற்கு முன்னர் தங்களின் ஆலோசனைகள் பரிந்துரைகள் பிரச்சினைகளை எழுத்து மூலம் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கும் பட்சத்தில் எம்மால் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைத்து விரைவான தீர்வுகளை காணமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ரத்ன கமகே கருத்து
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38% ஆகவுள்ளது. அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாகவுள்ளது. ஜனாதிபதி கடற்றொழி்ல் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழி்லாளர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருகிறது.
கடற்றொழி்லாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து தீர்க்க காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




