ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் கண்டுகொள்ளப்படாத விடயம்: தீர்வைப் பெற்றுத் தரக் கோரும் மக்கள்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லும் மக்கள் பல வருடங்களாக அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி முழுமையாக செப்பனிடப்படாது இருப்பதால் அவர்கள் இந்த அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர்.
கருங்கல் சல்லிக்கற்களை வீதிக்கு இட்டு விட்டு அதனை அழுத்தி தார் ஊற்றாது கற்கள் சிதறிக்கிடக்க விட்டிருப்பதானது அதன் மீது மக்கள் பயணிப்பதற்கு இடையூறாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்த பாதை சீர்செய்யப்படாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையானது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் உள்ள பொறுப்புணர்ச்சியை கேள்விக்குட்படுத்தக் கூடியது என்பதும் நோக்கத்தக்கது.
முதியவர்களின் சிரமம்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையானது ஒட்டுசுட்டானைச் சூழவுள்ள பல கிராமங்களில் வாழும் மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வருகிறது.
வறிய மக்கள் பலரைக் கொண்ட அந்த கிராமங்களில் இருந்து பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் வயோதிபர்கள் இந்த பாதையினைக் கடந்து செல்லும் போது அதிகமான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக் காட்டுகின்றார்.
பல வருடங்களாக சீரமைக்காது இருக்கும் இந்த பாதையினை சீரமைத்துக் கொடுத்தால் அவர்கள் இலகுவாக நடந்து வைத்தியசாலையை அடைய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு பிரதான பாதையில் இருந்து வைத்தியசாலை வரைக்குமான 75 மீற்றருக்கும் கூடிய பாதையினை கடந்து செல்ல நேரிடுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாதையும் பிரதேச வைத்தியசாலையின் முற்றமும் சல்லிக்கற்களைப் பரப்பி மூடியுள்ளனர். சல்லிக்கற்கள் மீது சீமெந்தோ அல்லது தாரினையோ இட்டு கற்கள் நகராது அமைத்திருந்தால் பயணங்களுக்கு ஏற்ற பாதையாக அது இருந்திருக்கும் என சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று வந்த முதியவருடனான உரையாடலின் போது தன் கருத்துக்களை மேற்கண்டவாறு அவர் பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைகளின் பரம்பல்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையினைச் சூழவுள்ள இடங்களில் உள்ள வைத்தியசாலைகளின் அமைவு அதிக தூரங்களினைக் கொண்டுள்ளது.
புதுக்குடியிருப்பு, மாங்குளம், நெடுங்கேணி ஆகிய இடங்களில் பிரதேச வைத்தியசாலைகள் உள்ளன. முல்லைத்தீவு - மாஞ்சோலையில் மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எல்லா வைத்தியசாலைகளும் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையிலிருந்து 20 கிலோமீற்றர் தூரத்திலும் கூடிய சராசரித் தூரத்தினைக் கொண்டுள்ளன என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
ஆகவே பிரதேச வைத்தியசாலையான இதனை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வாழும் வயதான ஒருவர் இது பற்றி விளக்கமளித்திருந்தார்.
பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெறும் பிரதேச அபிவிருத்தி கூட்டங்களின் போது இந்த பாதை தொடர்பில் கவனமெடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டினை அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர் ஒருவர் முன்வைப்பதும் நோக்கத்தக்கது.
நோயாளர் நலன்புரிச் சங்கம் இல்லாத நிலை ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் இருக்கின்றது. இதனால் வறிய நோயாளர்களின் நலன்களில் அக்கறை காட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலை இருப்பதும் கவலைக்குரிய விடயமாகும் என மற்றொரு சமூக ஆர்வலர் சுட்டிக்காட்டுவதும் நோக்கத்தக்கது.
பிரதேசங்களில் உள்ள தேவைகளினடிப்படையில் அபிவிருத்தி கூட்டங்களின் கலந்துரையாடல் அமையும் போது அந்தக் கலந்துரையாடலின் விளைவுகள் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதாக அமையும்.
எனினும், பிரதேச வைத்தியசாலையின் இந்த பாதை 2018 ஆம் ஆண்டு முதல் இவ்வாறே சீர்செய்யப்படாது இருப்பதாக ஒட்டுசுட்டான் மக்கள் பலர் குறிப்பிட்டிருந்ததும் நோக்கத்தக்கது.
விரைவில் புனரமைக்கப்படுமா
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லும் பாதையின் புனரமைப்பு தொடர்பாக உரிய தரிப்பினர் கவனமெடுத்து விரைவாக அதனை சீர்செய்து கொள்ள முடிந்தால் மக்கள் இதனால் பயனடைவார்கள் என்பது வெள்ளிடை மலையாகும்.
மக்களிடையே பரவலாக மேற்கொண்ட தேடலின் போது இந்த பாதையின் புனரமைப்பு விரைவாக நிகழ வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கை இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |