எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்பே மாகாண சபைத் தேர்தல்! அரசாஙகம் அறிவிப்பு
எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்பே மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(19) நடைபெற்ற அமர்வின் போது மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ''மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முறைமை
நல்லாட்சி அரசாங்கம் பழைய தேர்தல் முறைமையை இரத்துச் செய்து, புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தியது. புதிய தேர்தல் முறைமை கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

கலப்புத் தேர்தல் முறைமை 50 சதவீதம் தொகுதி அடிப்படையிலும், 50 சதவீதம் மேலதிக பட்டியல் அடிப்படையிலும் காணப்பட்டது.
எவ்வாறு இருப்பினும் நாட்டில் தற்போது மாகாண சபைத் தேர்தல் முறைமை ஒன்று உள்ளது. புதிய தேர்தல் முறைமையில் எல்லை நிர்ணயம் பிரதான ஒன்றாகக் காணப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தல்
எல்லை நிர்ணயத்தில் தொழில்நுட்ப விடயங்கள் உள்ளடக்காமல் இருப்பது தற்போதைய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அதற்குத் தீர்வு காண வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கும் போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டும்.
அது தேர்தலைப் பிற்போடும் செயற்பாடாக அமையாது. சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவது ஜனநாயகமிக்கதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.