மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மாவீரர்களை அஞ்சலித்த முதல்வர்
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வின் போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சபை அமர்வு ஆரம்பத்தின் போது கார்த்திகை 27 இடம்பெறவுள்ள மாவீரர் தின அனுஸ்டிப்பினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் தின அனுஸ்டிப்பு
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமை கோரிய போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த உறவுகளை அனுஸ்டிக்கும் முகமாக கார்த்திகை மாதம் 27ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய சபை அமர்வின் போது மாநகர முதல்வரால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கிணங்க உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இதன்போது மாநகர முதல்வர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரிய போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் முகமாக கார்த்திகை 27 மாவீரர் தின அனுஸ்டிப்பு இடம்பெறவுள்ளது.

எந்த நோக்கத்திற்காக யுத்தம் இடம்பெற்று, அந்த யுத்தத்தில் எமது உறவுகள் உயிர் நீத்தார்களோ அந்த நோக்கம் எமது மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டும்.
அவ்வாறு இன்னுயிரைத் தியாகம் செய்த உறவுகளை நினைந்தும், அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டியும் இறைவனைப் பிராத்திப்போம் என்று சுட்டிக்காட்டினார்.

