தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும்
இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன்.
அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும்.
இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்களவிற்கு வெள்ளிடை மலையென ஒன்று தெரியும்.
பாக்கு நீரிணை
அதாவது அந்தப் பாக்கு நீரிணைதான் இந்தியாவின் தொடர் நிலப்பரப்பிலிருந்து இலங்கையை பிரித்து ஒரு தீவாக்கியது. இதன் மூலம் பாக்கு நீரிணைதான் இலங்கையை ஒரு நாடாக்கியது. அதுதான் இலங்கையை ஒரு தனி அரசாக்கியது. இந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தத்துக்கு ஒரு வரம்.
பௌத்தம் பிறந்த இந்தியாவிலேயே இந்து மதப் பிரிவுகளினால் பௌத்தம் அழிக்கப்பட்ட போதிலும் பௌத்தம் புகுந்த இலங்கைத் தீவில் அந்தப் பாக்கு நீரிணையால் அந்த பௌத்தமும் பௌத்த அரசும் பாதுகாக்கப்படுகிறது.

ஒருவேளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்திய பேரரச ஆதிக்க விருத்தியின் ஒரு வடிவமாக பௌத்தம் இலங்கைக்கு சமாதானபூர்வமாக கொண்டுவரப்பட்ட போதிலும் அனுராதாபுரம் மன்னன் தீசன் மௌரியப் பேரரசர் அசோகத் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி மீள் முடி தரிக்கப்பட்டார் என்று மகாவம்சம் கூறுகிறது.
மேலும் சக்கரவர்த்தி அசோகரின் பட்டப்பெயரான "தேவநம்பிய" என்பது தீசனுக்கான முடிக்குரிய பேராக்கப்பட்டு தீசன் தேவநம்பிய தீசன் என அரச பட்டப் பெயர் சூட்டப்பட்டார். இது இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் தெளிவான அரசியல் வடிவம்.
ஆயினும் சிங்கள அரச பௌத்த சமூக உருவாக்கமானது இலங்கை அனுராதபுரத்தில் தோன்றி வளர்ந்து வந்த ஒரு அரச சமூக வளர்ச்சியின் கழுத்தில் ஒரு கூரிய இந்திய ஆதிக்க வாளாக பௌத்தம் இலங்கையை அணுகிய போது அனுராதபுரத்தில் முகிழ்ந்து எழுந்து வந்த உயர அரச குழாம் கழுத்துக்கு ஓங்கப்பட்ட அந்த வாளை தமது தலைக்கும் நெஞ்சுக்குமான கவசமாக மாற்றிக் கொண்டனர். இது ஒரு பொழுதில் நிகழ்ந்தது அல்ல.
பௌத்த அரச பண்பாடு
தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இவ்வாறு முகிழ்ந்தெழுந்து. இந்நிலையில் சிங்கள அரசு, பௌத்த மகா சங்க நிறுவனம், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டிய ஒரு வடிவமாய் சிங்கள பௌத்த அரச பண்பாட்டு வாழ்வு முதிர்ச்சி அடைந்தது. அரசை பௌத்த நிறுவனத்தினாலும் மக்களாலும் என ஒன்றுடன் ஒன்றாய் மூன்றையும் திரட்டி எடுத்தனர்.
சிங்கள பௌத்த இலங்கை அரசு என்பதன் தெளிவான திரட்சி பெற்ற வடிவம். மேற்படி மூன்றுக்கும் அச்சாணியாயும் அரணாயும் விளங்குவது பாக்கு நீரிணையாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை பிரித்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாக்கு நீரிணை என்ற அரணை எப்படி ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு இணைக்கத் தயாராகுவார்கள்.

ஆனால் அப்பக் கோப்பைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பாக்கு நீரிணை என்ற மந்திர வித்தை இன்னும் தெரிந்து கொள்ளப்பட்டதாய் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, அப்படி ஒரு பொருள் இருப்பதாக திரும்பி பார்ப்பதும் இல்லை.
வானத்து வெள்ளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பாம்பு புதருக்குள் காலூன்றி நடக்கும் நிலையிற்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் போக்கு உண்டு. பாலம் கட்டுவது தொடர்பாக புத்திசாலித்தனமான சிங்கள தலைவனை கேட்டால் அதற்கு "ஆம்" என்று பதில் சொல்வான், ஆனால் பாலம் கட்டமாட்டான். ஆம் என்று சொல்வதற்கு காரணம் தூணேறிய சிங்கமாக ஒருபுறமும் காராம் பசுவாக மறுபுறமும் உள்ள இந்தியாவின் முன் அதன் கவனத்தை ஈர்ந்து ஆடிப் பாடிப் பால் கறப்பதற்கு.
அதேவேளை பாலம் கட்டுவது பற்றி ஒரு அடிமட்ட சாதாரண சிக்கள மகனிடம் கேட்டால் கட்டவேண்டாம் என்று சொல்லுவான் கட்டவிடவும் விட மாட்டான். சிங்கள புத்திசாலியின் "ஆம்" என்ற தந்திரம் துணேறிய சிங்கத்தை திசை திருப்பவும் உதவும் காராம் பசுவில் பால் கறக்கவும் உதவும்.
வைஷ்ணவ கடவுளாகக் கொள்ளப்படும் இராமபிரானின் ஆணைப்படி இலங்கை மீது படையெடுப்பதற்காக தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஹனுமானால் கட்டப்பட்டது இராமர் பாலம் என்கிறது இதிகாசம். "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்றார் இந்திய தேசிய கவிஞர் பாரதியார். எனவே மத நம்பிக்கையின் படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கிறது.
இலங்கைக்கு ஒரு பாலம்
இந்திய தேசிய சிந்தனையின்படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசியம் எதிர்பார்க்கிறது. முழு இந்தியாவையும் கூடவே அத்துடன் இலங்கைத்தீவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே "சிந்து நதியின் மிசை நிலவினிலே ..." என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை ஆகும்.
சிங்கள பௌத்த அரசையும் சிங்கள பௌத்த மதத்தையும் பொறுத்தவரை பாக்குநீரிணை சிங்கள பௌத்த அரசுக்கு ஓர் அரணாகும். பாக்கு நீரிணைதான் புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இருந்துவந்த நிலத் தொடரைத் துண்டித்து இலங்கையை ஒரு தீவாயும், ஒரு நாடாயும், ஒரு தனியரசாயும் ஆக்கியது.

பௌத்தம் பிறந்த இந்தியாவில் அது இந்து மதப் பிரிவுகளால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்ட போது இலங்கை என்ற தீவிற்தான் அது தரித்துப் பாதுகாக்கப்பட கூடியதாக இருந்தது. அந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு வரமும் கொடையுமாகும்.
அதேவேளை பாக்கு நீரிணையின் ஒரு புறத்தில் ஈழத் தமிழரும் அதன் மறுபுறத்தில் தமிழகத் தமிழரும் வாழ்ந்து வரும் நிலையில் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையேயான உறவை சிங்கள பௌத்த அரசு கசப்புடன் பார்த்து வருவதுடன் அத்தகய கசப்பினதும் பயத்தினதும் பின்னணியில் சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வருகின்றது என்பதும் கண்கூடு.
மேலும் ஈழத் தமிழரை இந்திய ஆதிக்க படர்சியின் கருவிகளாகவும் இந்திய அரசின் ஆதிக்க படர்ச்சிக்கான ஓர் ஏதுவாகவும் ஈழத் தமிழரை சிங்கள அறிஞர்களும், வரலாற்றாளர்களும், தலைவர்களும், பௌத்த மத நிறுவனமும் ஆழமாக நம்பியும், கருதியும் வருகின்றனர்.
கூடவே கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்தமும் இந்திய பேரரச ஆதிக்கப் படர்சியின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்ததை சிங்கள பௌத்த தரப்பினர் உணரத் தவறவில்லை. இந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய ஆதிக்க பரவலை பெரிதும் தடுப்பதற்கு இயற்கையாக காணப்படும் பாக்கு நிரிணையை ஒரு வரமாகவே கருதும் சிங்கள பௌத்த தரப்பினர் செயற்கையாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாலம் அமைக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
ஜேவிபி தலைமையிலான அரசாங்கம்
சிங்களவரின் கண்ணில் இராமர் கட்டிய பாலம் இலங்கை மீதான இந்தியாவின் படையெடுப்புகானது. இந்துமா கடலின் மையத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கைதீவு வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கோ அன்றி செல்வாக்குக்கோ உள்ளாகும் போது இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்ற நிலையில் ஒரு பாலம் அமைப்பதன் மூலம் வெளி வல்லரசுகளுக்கான வாய்ப்பை துண்டித்து விடலாம் என இந்திய அரசு நம்புகிறது.
இத்தகைய பின்னணியில் மேற்படி பாலம் அமைப்பது பற்றிய அவாவும் கற்பனையும் இந்திய தரப்பில் எழுவது இயல்பு. அதன்படி இந்தியா அதற்கான முயற்சிகளை கற்பனை கலந்த ரசனையுடன் மேற்கொள்கிறது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி பாலம் கட்டுவதற்கான வாக்குறுதிகளை வானளாவ நட்சத்திரங்கள் என பறக்க விட்டார்.

நிச்சயம் அவருக்குத் தெரியும் தான் புளுகுப் பெட்டிகளை அவிழ்த்து விடுகிறேன் என்பது. அவருக்கு இருந்த அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் வாயில் அல்வாவை வைத்து காராம் பசுவிடமிருந்து கறக்க வேண்டியவற்றை கறப்பதற்காக அப்படி அவர் இந்திய மண்ணில் நின்று செயல்பட்டார்.
தொடர்ந்து இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலான கலந்து உரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன.
ஆசிய வங்கியில் இதற்காக இந்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாக்களைக் கடன் கோரியும் இருந்தது. அந்தளவுக்கு திட்டம் நடைமுறை சார்ந்து இந்திய தரப்பில் நம்பிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளஒரு புத்திசாலியிடம் கேட்டால் அவன் பாலம் அமைக்க "ஓம்" என்று சொல்வான், ஆனால் கட்டமாட்டான். ஓர் அப்பாவின் சிங்களமகனை கேட்டால் அவன் பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லுவான்.
இங்கு புத்திசாலியோ அப்பாவியோ இருவரும் பாலம் கட்ட மாட்டார்கள் என்பது உறுதி. இதில் ரணில் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர். இதுதான் சிங்கள பௌத்த யதார்த்த நிலை. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அரசனோ ஆண்டியோ, ஞானியோ பாமரனோ எவரும் பாலம் கட்டுவதில்லை என்பதில் உறுதியானவர்கள்.
இந்நிலையில் இப்போது பதவி இருக்கும் ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இந்தப் பாலத்தை கட்ட மாட்டாது. கட்டப்பட உள்ளதாக இருப்பது கற்பனை; கட்டப்படாமல் இருக்கப் போவதே யதார்த்தம்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri