காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: அதிகரிக்கும் உயிர்சேதம்
விமானத் தாக்குதல் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக காசா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் குண்டுவீச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி, காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் இராணுவம் ஆயத்தமாக உள்ளதாக தெரியவருகிறது.
நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பு
ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 18 நாட்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து காசா பகுதியில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறினாலும், அதன் குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை 2,360 சிறுவர்கள் உட்பட மொத்தமாக 5,791 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.