எரிபொருள் விலை உயர்வு : வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
இலங்கையில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்த நிலையில், திடீரென நள்ளிரவில் எரிபொருள் விலையை அதிகரித்திருப்பது மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு "பெரிய மாபியா" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார்.
விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி: எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு
தேவையான எரிபொருள்
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வழங்கிய தரவுகளைச் சுட்டிக்காட்டி மரிக்கார் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் 26 நாள்களுக்குத் தேவையான பெற்றோலும், 30 நாள்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளது என்று ஜனாதிபதியே நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
அவ்வாறு போதிய கையிருப்பு இருக்கும்போது, எதற்காக நள்ளிரவில் அவசரமாக விலையை உயர்த்த வேண்டும்? உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பழைய கையிருப்பிற்குப் புதிய விலையை அறவிடுவது மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும்.

இதற்கு மத்திய கிழக்கு போர்ச் சூழலை அரசு ஒரு சாட்டாகப் பயன்படுத்துகின்றது. இந்த அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டம் இல்லை. இதனால் நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு மற்றும் ஊழல்களுக்குப் பொறுப்பான வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு முறைகேடாகப் பதவிகளை வழங்கியமைக்காக ஜனாதிபதியும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.