இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட போர் கப்பல் தொடர்பில் ஈரானின் குற்றச்சாட்டு
இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானின் ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் மூழ்கிய சம்பவத்தில், மீட்புப் பணிகளை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலை ஒரு "போர்க்குற்றம்" என்றும் ஈரான் வர்ணித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் கூட்டு கடற்படைப் பயிற்சி மற்றும் துறைமுக விஜயத்திற்காக சென்று திரும்பிய போதே இப்போர் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இந்தியா மற்றும் இலங்கை கடற்கரைகளுக்கு அருகிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாகேய் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல், இது போர்க்குற்றத்திற்குச் சமமானது.
மேலும், கடலில் தத்தளித்த மாலுமிகளைக் காப்பாற்றும் மீட்புப் பணிகளை அமெரிக்கா வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மொத்தம் 104 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் இதுவரை 84 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை மீண்டும் ஈரானுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளில் இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் இந்த உடல்கள் விரைவில் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்தச் சம்பவம் சர்வதேச கடற்பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது.