ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரின் சொகுசு ரிசார்ட் நிலத்தில் முறைகேடு! தீவிரமடையும் போராட்டம்..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள சொகுசு ரிசார்ட் நிலத்தின் பத்திரங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து அல்பேனியா நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில், இந்த நில மோசடிப் முறைப்பாடு திட்டத்திற்குப் புதிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தில் முறைகேடு
இந்த நிலத்தை விற்பனை செய்த மியாமி தொழிலதிபர் அர்தூர் ஷேஹு மற்றும் அவரது கூட்டாளிகள், கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை அல்பேனியா நாட்டுப் சொத்துகளில் முதலீடு செய்ததாகவும், பணத்தின் ஆதாரத்தை மறைக்கப் போலிப் பத்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, இந்த நில விற்பனையுடன் தொடர்புடைய சுமார் 110 மில்லியன் யூரோ (சுமார் 126 மில்லியன் டொலர்) பணத்தை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இருப்பினும், இந்த நில விவகாரத்தில் குஷ்னருக்கோ அல்லது அவரது நிறுவனத்திற்கோ ஷேஹு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னரே தெரிந்திருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் போராட்டம்
கடலாமைகள் மற்றும் பிளமிங்கோ (பூநாரை) பறவைகளின் புகலிடமாக விளங்கும் அல்பேனியாவின் தெற்கு கடலோரப் பாதுகாக்கப்பட்ட ஈரநிலப் பகுதியில் இந்த சொகுசு ரிசார்ட் அமையவிருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் பிளமிங்கோ பறவையைத் தங்களின் அடையாளமாகப் பயன்படுத்தி, இதனை ஒரு 'பிளமிங்கோ புரட்சி' என்று அழைத்து வருகின்றனர்.
தொடக்கத்தில் ரிசார்ட் திட்டத்திற்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது பிரதமர் எதி ராமா தலைமையிலான அரசின் ஊழல்களுக்கு எதிராகவும், அவரது பதவி விலகலை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளன.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முன் திரண்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கலைத்ததால் பெரும் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்