2,500 மில்லியன் ரூபாய் செலவில் முல்லைத்தீவு குடிநீர்த் திட்டம் நிறைவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரும்புள்ளியான் பகுதி மக்களின் நீண்டகாலக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உலக வங்கியின் 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய குடிநீர் வழங்கல் திட்டம் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(24.11.2026) இடம்பெற்றுள்ளது.
கரும்புள்ளியான் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக எதிர்நோக்கி வந்த சுத்தமான குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குடிநீர் வழங்கும் திட்டம் மக்களிடம் கையளிப்பு
பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று(24) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச்.எம்.சுனில் ரணசிங்க ஆகியோரால் பொதுமக்கள் பாவனைக்கு குடிநீர் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஊடாக துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தடையின்றிச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



