10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), மண்சரிவு தொடர்பான முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (நவம்பர் 24) மாலை 4.00 மணி முதல் நாளை (நவம்பர் 25) மாலை 4.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள்
கவனமாக இருக்கவும் என்ற நிலை 2 அம்பர்(செம்மஞ்சள்) எச்சரிக்கை
- கண்டி மாவட்டம்: உடுநுவர.
- கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியாந்தோட்டை, மாவனெல்ல மற்றும் ரம்புக்கனை ஆகிய இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

விழிப்புடன் இருக்கவும் என்ற நிலை 1 – மஞ்சள் எச்சரிக்கை
- கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க.
- கண்டி மாவட்டம்: யட்டிநுவர ஆகிய இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக மலைச்சரிவுகளில் மண் சரிதல், பாறைகள் சரிந்து விழுதல், மண் அணைகள் இடிந்து விழுதல், நிலம் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, மலைப்பாங்கான பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.