இலங்கையில் மொசாட் உளவாளிகளா! நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை
இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் உளவாளிகளுக்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன என்றும், கொழும்பு 7 இல் அமைந்துள்ள சபாத் ஹவுஸ் (Chabad House) ஏன் இன்னும் மூடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மொசாட் உளவாளி
மேலும், பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற உயிரிழப்புகளுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரும் இலங்கைக்கு வருவதற்கு இந்த விசா நடைமுறை வாய்ப்பளிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுக்கு அதிகளவிலான செயற்பாட்டு இடத்தை வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.