ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமது நிலைப்பாட்டில் இருந்து விலகாத மோடி
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தனது நாட்டுக்கு சிக்கனமானதாக இருப்பதால், இந்தியா தொடர்ந்தும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்யும் என்று இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவிலிருந்து எரிசக்தி கொள்முதல் காரணமாக இந்தியப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரிகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்த போதிலும், இந்தியா தமது இந்த தீர்மானத்தை தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு மொஸ்கோ, உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் ரஷ்ய எண்ணெயைத் தவிர்த்துள்ளன.
50 வீத வரி
இதனையடுத்து, ரஷ்யாவின் கடல்வழி மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியது. இதன் காரணமாக, ரஷ்ய உற்பத்தியில் தள்ளுபடியையும் இந்தியா பயன்படுத்திக்கொண்டது. அத்துடன் ரஷ்யாவின் எண்ணெய்யை கொள்முதல் செய்வதன் மூலம் சந்தைகளை சமநிலையில் வைத்திருப்பதாகவும் புதுடில்லி தெரிவித்துள்ளது.
எனினும், உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் மொஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 வீத வரியையும் அவர் விதித்துள்ளார்.
இந்தநிலையில், ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் நாடான இந்தியா, ரஷ்யாவின் எண்ணெய் விநியோகங்களைத் தவிர்க்கும் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



