சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்...
கடந்த இரு வாரங்களாக வெனிசுவேலாவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பற்றிய செய்திகளுமே அதிகம் பேசப்படுகிறது.
03.01.2026இல் அமெரிக்க சிறப்பு படையினர் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் தரையிறங்கி தாக்குதல் நடத்தி வெனிசுவேலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவையும், அவரது மனைவியும் அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றனர்.
இந்நடவடிக்கை நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் பற்றி ஆராய்வதும் இது சர்வதேச அரசியல் ஒழுங்கில் எத்தகைய பங்கினை வகிக்கின்றது? உலகம் தழுவிய அரசியலில் வல்லரசுகளின் தேசிய நலன்கள் எத்தகையது என்பது பற்றியும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் சர்வதேச அரசுகளின் தேசிய நலன்கள் என்ன? வல்லமை வாய்ந்த அரசுகளின் தேசிய நலன் என்ன? வல்லரசு நாடுகளின் தேசிய நலன் என்ன? என்பது பற்றிய தத்துவார்த்த பார்வை அவசியமானது. அத்தகைய ஒரு பார்வைக்கூடாகவே உலகளாவிய அரசியலையும், அரசுகளின் தகுதிக்கேற்ப அவற்றினுடைய தேசிய நலன்கள் எவ்வாறெல்லாம் மாறுபடுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில்
வெனிசுவேலா ஜனாதிபதியை கடத்தியதற்கான காரணங்களாக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்ப்போமாயானால் முதலில் 2020அஇல் அமெரிக்க நீதிமன்றில் மதுரோவை நர்கோ‑தர்மப் எனப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதன்படி அவரை அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக 2025இல் அந்த குற்றச்சாட்டிற்காக நிகோலஸ் மதுரோவை கைது செய்யவதற்கான தகவல் வழங்குபவருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு என்ற அறிவித்தது.

இது கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கான அறிவிப்பாகும். அவ்வாறே வெனிசுவேலாவின் இறைமையை மீறி கைதுசெய்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தியும் விட்டது.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஜனாதிபதியை, அந்த நாட்டுக்குள் நுழைந்து கைது செய்வதென்பது இறைமை மீறல் மற்றும் சர்வதேச சட்ட மீறல்தான்.
இறையாண்மை(Sovereignty) என்றால் ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் வாழும் மக்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் செலுத்துகின்ற மட்டற்ற அதிகாரம் எனப்படும்.
அது தனது அரசை வெளிநாட்டு தலையீடின்றி தானே நிர்வகிக்கும் முழு உரித்தியுடையது என்பதை ஐநா சாசனத்தின் Article 2(4) தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஆகவே வெனிசுவேலா நாட்டுக்குள் அமெரிக்கப்படை வந்து கடத்துதல் என்பது வெனிசுவேலா நாட்டின் எல்லை மீறல், அரசியல் தலையீடு, ராணுவ ஆக்கிரமிப்பு என்பதோடு சர்வதேச சட்ட ஒழுங்கு மீறலாகும்.
இது ஐ.நா சாசனப்படி சட்டவிரோதம். சர்வதேச விதிமுறைகளின்படி ஒரு நாட்டின் தலைவருக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு(Diplomatic Immunit) வழங்குகிறது. அது பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு(Sitting Head of State) தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
பதவியில் இருக்கும் நாட்டின் தலைவரை வெளிநாட்டு நீதிமன்ற கட்டளையின் பெயரிலோ அல்லது வெளிநாட்டு அரசோ கைது செய்ய முடியாது. ஆனால் இதற்கும் விதிவிலக்கு ஐநா சாசனத்தின்படி உண்டு. பதவியில் இருக்கும் ஒரு அரசுத் தலைவரை கைது செய்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையில்(UN Security Council) அனுமதி அளித்தால் மாத்திரமே முடியும்.
அதுவும் ICC என்று அழைக்கப்படுகின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாத்திரமே குற்றம் சாட்டப்பட்ட அரசுத் தலைவரை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.
அதே நேரத்தில் வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களை கொன்று ஜனாதிபதியை கைது செய்தமை குற்றம் என்று உலக நாடுகள் சொல்லிக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொண்டாலும் அமெரிக்காவை சர்வதேச நீதிமன்றத்தில் (International Criminal Court) நிறுத்த முடியாது.
ஏனெனில் ICC என்பது ஐ.நாவுக்கு முழுமையாக கட்டுப்பட்டது அல்ல. அதே நேரம் அமெரிக்கா ICC உறுப்பினர் நாடுமல்ல. எனவே அமெரிக்கா ICCன் அதிகாரத்தை ஏற்கப்போவதில்லை. ஆகவே அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத்தையோ குறைந்தது ஒரு குடிமகனையோ ICC மூலம் தண்டிக்க முடியாது என்பதே உண்மையாகும்.
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை
இங்கே வெனிசுவேலா ஜனாதிபதி தொடர்பாக அமெரிக்கா கூறுவது “போதைப்பொருள் குற்றம்” மற்றும “அவர் சட்டபூர்வ அதிபர் அல்ல”அவர்“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”என்பதாகும்.
இவை சர்வதேச சட்டத்தில் ஒருதலைப்பட்ச காரணங்களாகவே பார்க்கப்படுகின்றது. இதனை ஏனைய நாடுகள் ஏற்க வேண்டியதுமில்லை. வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் இந்தச் செயலை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் தலைவரை, சீனா தைவான் தலைவரை மற்றும் வல்லமை வாய்ந்த நாடுகள் தமது அயல்நாடுகள் மீது இத்தகைய அத்துமீறல்களை செய்வதற்கு வாய்ப்பாகிவிடும்.
இதன் மூலம் உலக ஒழுங்கு(World Order) சிதைந்து விடும். “வல்லமை உள்ளவன் தான் வைத்ததே சட்டம்”என்ற நிலை உருவாகும் என உலகின் ஜனநாயக வாதிகள் குரல் கொடுக்கின்றனர்.
இதற்கு எதிராக உலகின் 196 நாடுகளில் ரஷ்யா, சீனா, ஈரான், கியூபா ஆகிய நான்கு நாடுகளை தவிர வேற எந்த ஒரு நாடும் கண்டனங்களையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கவில்லை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. இதற்கு எதிராக ஏன் 191 நாடுகள் திறந்தவெளியில் பேசவில்லை? ஐ.நாவால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? உலகம் “அமெரிக்கா தவறு” என்று சொல்ல தயங்குவது ஏன்? என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழக்கூடும்.
ஐ.நா என்பது “உலக அரசு” அல்ல. ஐ.நா க்கு சொந்த இராணுவம், நேரடி கைது அதிகாரம், நாடுகளை கட்டாயப்படுத்தும் சக்தி ஏதுமே கிடையாது. ஆகவே ஐ.நா என்பது ஒரு உரையாடல் மேடை, ஒப்பாரி மண்டபம் மட்டுமே. அது தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் அல்ல.
அதேபோல ஐநா பாதுகாப்புச்சபை (Security Council) என்பதுவும் உண்மையான அதிகார மையம் அல்ல. ஐநா பாதுகாப்புச் சபையில் அங்கம் வைக்கும் 15 உறுப்பு நாடுகளில் 5 நிரந்தர உறுப்பு நடுகலான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றிற்கு ரத்து அதிகாரம்(VETO) உள்ளது.
இந்நாடுகளில் ஏதேனும் ஒன்று பாதுகாப்பு சபை எடுக்கும் தீர்மானத்தை ரத்துச் செய்ய முடியும். எனவே ஐந்து நாடுகளில் ஒரு நாடு VETOஐ பயன்படுத்தினால் தீர்மானம் நிறைவேறாது. அத்தோடு விசாரணையுமில்லை, தண்டனையுமில்லை.
ஆகவே வெனிசுNtலா விவகாரத்தில் அமெரிக்கா மீது குற்றச்சாட்டு வந்தால்? அதற்கு எதிராக அமெரிக்கா VETO என்பார்கள் உடனே விவகாரம் முடிந்தது.
மேற்படி விடயத்தில் இருந்து ஒரு தத்துவார்த்த உண்மை புரியப்பட வேண்டும்.
VETO என்ற அதிகாரம்
ஐநா என்பது உலகளாவிய நாடுகளுக்கான பொதுவான சட்டங்களையும், ஒழுங்குகளையும், தீர்மானிக்கிறது வரையறுத்துள்ளது. அது தான் வரைந்து வைத்துள்ள சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுவதற்கான ஒரு சட்டத்தையும் அங்கு வரைந்து உள்ளது என்பதுதான் மிகக் கொடூரமான உண்மையாகும்.
இது என்னவெனில் ஐநா பாதுகாப்பு சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரத்தை வழங்கி தான் வகுத்த அதே சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறுவதற்கான ஒரு ஒழுங்காக VETO என்ற அதிகாரத்தை வழங்கி உலகின் 191 நாடு ஏற்றுக்கொண்ட சட்டத்தை மீறுவதற்கான ஒழுங்கையும் 5 நாடுகளுக்கு கொடுத்துள்ளது.

இது ஐநாவின் குறைபாடு மாத்திரம் அல்ல உலக மக்கள் மீது வைக்கப்பட்டு இருக்கின்ற போலியான முகத்திரை என்பதோடு, ஜனநாயகம் என்பது இந்த பூமியில் இல்லை என்பதை வெளிக்காட்டி நிற்பதாகவும் அமைகிறது.
இதற்கு இன்னும் ஒரு உதாரணத்தையும் கூற முடியும் VETO அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் சீனா தவிர்ந்த ஏனைய நான்கு நாடுகளின் சனத்தொகையிலும் விட இந்தியாவின் ஜனத்தொகை மிகப் பெரியது.
ஆயினும் அதற்கு VETO அதிகாரம் இல்லை. ஜனநாயகம் என்பது பெரும்பாண்மை விருப்பு. அப்படியானால் இந்தியாவுக்கு VETO அதிகாரம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? இதிலிருந்து சமத்துவ உலகின் ரம்யமான அழகிய இலட்சியக் கனவுதான் ஐநா மன்றம்.
இப்போது அமெரிக்கா வெனிசுவேலா ஜனாதிபதியை கைது செய்வதற்கான காரணமாக கூறப்பட்டதை பற்றி எதுவும் பேசாமல் வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் பற்றியும், அங்குள்ள சீன முதலீடுகள் பற்றியுமே பேசுகின்றது.
அப்படியானால் வெனிசுவேலாவுக்குள் அதன் இறையாண்மையை மீறி, சர்வதேச ஒழுங்கையும் மீறி வெனிசுவேலா ஜனாதிபதியை கைது செய்தது என்பது வெனிசுவேலா ஜனாதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக அல்ல இந்தக் குற்றச்சாட்டு என்பது அமெரிக்க நாட்டின் புவிசார் அரசியலிலும், அமெரிக்காவின் தேசிய நலன்களிலும், அமெரிக்காவின் உலகம் தழுவிய ஆளுகைக்கும் வெனிசுவேலா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளமை என்பதே தெளிவாகத் தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகள் மீண்டும் குடியேற்றங்களை நிறுவ
அமெரிக்கா வெனிசுவேலாவை மட்டுமல்ல லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றையும் கட்டுப்படுத்த முனைகிறது. இதற்கான காரணங்கள் பற்றி நோக்குவதும் அவசியமானது.
அமெரிக்க சுதந்திரப் போருக்கு பின்னர் அமெரிக்க ஐக்கிய ராஜ்யங்கள் அமெரிக்க கண்டத்தை வெளியார் அணுகுவதை தடுப்பதற்கான மூலோபாயங்கயை வகுத்தது.

1823,ல் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜேம்ஸ் மொன்றோ (James Monroe) அமெரிக்க கண்டங்களில்(வட-தென் அமெரிக்காவில்) ஐரோப்பிய நாடுகள் மீண்டும் குடியேற்றங்களை நிறுவுவதையோ, அரசுகளைக் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கப் போவதில்லை என பிரகடனம் செய்தார்.
அதனையே மொன்றோ கோட்பாடு(Monroe Doctrine) என அழைக்கப்படுகிறது. இந்த கொள்கை அமெரிக்கா கண்டத்தையும், அதன் இரு மருங்கிலும் உள்ள பசுபிக் பெருங்கடலின் பெரும்பகுதியையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் தனக்குரிய எல்லைகளாகவும், அதற்குள் பிற நாடுகள் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதையும் பிரகடனப்படுத்துகிறது. அது இன்றும் பின்பற்றுகிறது.
அமெரிக்கா மேற்கு அரைகோள(Western Hemisphere) பகுதிகளின் பாதுகாப்பை தானே நிர்வகிப்பேன் என்பதை பறைசாற்றுகிறது. அதை வெளிக்காட்டும் முகமாகவே இப்போது கிரீன்லாந்து தீவையும் தான் கைப்பற்ற போவதாக அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய உறவு உறவாயினும் எனது நலனுக்காக உனது பறியில் நான் கை வைக்க தயங்க மாட்டேன் என்பதாகவே உள்ளது. ஆசிய நாடுகளாயினும் சரி, ஐரோப்பிய நாடுகள் ஆயினும் சரி மேற்கு அரைக்கோளத்துக்குள் யாரும் நுழையக்கூடாது. யாரும் பொருளாதார நலன்களை அடையக்கூடாது.
அமெரிக்காவின் பாதுகாப்பு செல்வாக்கு மண்டலத்துக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுவே அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐநாவின் தோற்றத்தோடு ஆக்கிரமிப்பு யுத்தங்கள் முடிவடைந்து விட்டது என ஜனநாயக வாதிகள் மார்பு தட்டினார்கள். ஆயினும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் முடிவடையவில்லை.
பனிப்போர் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. அவ்வாறே பனிப்போரின் முடிவுக்கு பின்னரும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர்ந்தன.
ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நிறைவுக்கு வராதா? அல்லது முடிவடையாதா? என மனிதநேயவாதிகள் அங்கலாக்க கூடும் ஆயினும் பூமிப் பந்து இருக்கும் வரை, அதில் மனிதகுலம் இருக்கும் வரை ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடந்தே தீரும். இந்தப் பூமிப் பந்தில் உள்ள ஜீவராசிகள் உயிரை உயிருண்டு வாழ்வன. இது தவிர்க்கமுடியாத உயிரியல் பண்பாடு.
உயிரியல் நடைமுறை தத்துவார்த்த உண்மை. ஆகவே பலாத்காரம், வன்முறை, ஆக்கிரமிப்பு, கொலை இவைகள் உயிர் வாழ்வின் தொடர் விளைவுகள். இவற்றை நிறுத்திவிட முடியாது. தடுத்துவிடவும் முடியாது. இது உயிர்களுக்கு மாத்திரமன்று அது நாடுகளுக்கு நாடும், இனங்களுக்கு இனமும், பிரதேசத்திற்கு பிரதேசமும் நடந்தே தீரும்.
இன்றைய உலகில் தாராளப் பொருளாதார கொள்கையில் மேற்குலகம் சந்தைகளைத் திறந்து விட உலக நாடுகளை நிர்பந்தித்தது. அந்த நிற்பந்தம் உலகமயமாக்களாக சந்தைகள் விரிந்தன. அந்த சந்தைகள் மேற்குலகத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டி தருமெனை எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சந்தை பொருளாதாரத்தில் பெரும் மனிதவலுவைக் கொண்டுள்ள, மலிவுக்கூலி தொழிலாளிகளை பயன்படுத்தி பண்டங்களை உற்பத்தி சீனாவில் அதிகரித்தது. யாருக்காக சந்தைகள் திறக்கப்பட்டதோ அந்த மேற்குலகத்திற்கான சந்தையில் சீனா தனது கடைகளை விரித்து விட்டது.
தமக்காக திறக்கப்பட்ட சந்தைகள் இப்போது சீனாவுக்கான சந்தைகளாக மாறிப் போய்விட்டன.
வளங்களை திரட்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்வது.
சீனாவின் மலிவு உற்பத்திக்கு முன்னால் மேற்குலகின் உற்பத்திகள் நின்றுபிடிக்க முடியவில்லை. ஆகவே சந்தைகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்த போது மேற்குலகத்திற்கு தலைமை தாங்குகின்ற அமெரிக்காவே அதை கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் இப்போது உலகம் தழுவிய அரசியலில் அமெரிக்கா தனது பலத்தை பிரயோகிக்க முற்படுகிறது.
இன்னொரு வகையில் சொன்னால் அமெரிக்காவின் தேசிய நலன் என்பது உலகம் தழுவிய வளங்களை திரட்டி சுரண்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்வது.

வளர்ந்து வரும் சீனாவின் தேசிய நலன் என்பது உலகளாவிய இயற்கை வளங்களை சுரண்டி தன்நாட்டுக்கு கொண்டு சென்று அதனை முடிவு பொருட்களாக உலக சந்தையில் பரப்புவது.
இந்த இரண்டு போட்டிகளுக்கு இடையே உலகம் தழுவிய சிறிய இயற்கை வளங்களை கொண்ட நாடுகள் பந்தாடப்படுகிறது. அந்தப் பந்தாட்டத்தின் ஒரு பகுதிதான் வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் சீனாவுக்கு தேவைப்படுகிறது.
பெருந்தொகை வளத்தினை சீனா கொண்டு செல்வதும், அதன் வர்த்தகம் உலகசந்தையில் பெரும் பாத்திரத்தை வகிப்பதையும் அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை.
அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு சொந்தமான அமெரிக்க கண்டத்துக்குள் தனது பொது எதிரி உள்நுழைந்திருப்பதை அதனால் அனுமதிக்கவும் முடியவில்லை. இதனால்தான் பல வருடங்களாக திட்டமிட்டு வெனிசுவேலாவை முடக்குவதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சீனாவுடன் உறவு கொண்ட நாடுகளை முடக்குவதற்கான மூலோபாயத்தை வகுத்து சர்வதேச ஒழுங்கு விதிகளை மீறக்கூடிய அமெரிக்க உள்ளக சட்ட நடைமுறைகளுக்கு ஊடாக வெனிசுவேலா ஜனாதிபதியை தண்டிக்கின்றோம் என்ற பெயரில் சீனாவுக்கான பதிலடியை கொடுத்திருக்கிறது.
அவ்வாறே கடந்த வருடம் ஈரானின் எண்ணெய் வளம் சீனாவுக்கு செல்வதும் அந்தப் பெரும் வருவாய் கொண்டு எதிர்ப்பு நாடான ஈரான் அணு ஆயுத நாடாக மாறவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கா கண்ணும் கருத்துமாகவே உள்ளது.
மேற்குலகத்துக்கும் மத்திய கிழக்குக்குமான நீண்ட வரலாற்று பகையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக மத்திய கிழக்கில் செருகப்பட்ட ஆப்பாகவே இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டாகவே செயல்படுகிறது அதற்காக அது அயல்நாடுகளை ஆக்கிரமிக்க தவறவில்லை.இஸ்ரேல்நாடு பொருளாதார வளத்தில் மாத்திரம் வளர்ந்து செல்லவில்லை அது நிலப்பரப்பாலும் வளர்ந்து செல்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்ரேலின் தேசிய விருப்பு எகிப்தின் சினாய் தீபகற்பத்தை கைப்பற்றுவதோடு மத்திய கிழக்கையும் வட அபிரிக்காவையும் இரண்டாகப் பிளந்து இஸ்லாமிய உலகத்தை முற்று முழுதாக முடக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. அவ்வாறே சீனாவின் விருப்பு தாய்வானை ஆக்கிரமிப்பதன் மூலம் தென்சீனக் கடலை தனது முழுமையான கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வருவதும், பசிபிக் சமுத்திரத்தின் ஆசியக் கரைகளில் இருந்து அமெரிக்காவை அப்புறப்படுத்துவதுமே நோக்காக இருக்கிறது.
அதுவே அதனுடைய எதிர்கால பொருளாதார வளத்தை நிலை பெறச் செய்யும் சீனா நம்புகிறது. அதேபோலவே ரஷ்யாவும் கிழக்கை கிழக்கு ஐரோப்பாவில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தனது கட்டுப்பாட்டுங்கள் வைத்திருக்கவே முனைகிறது.
அதன் ஒரு பகுதிதான் உக்ரைன் நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பதும், உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என நிபந்தனை விதிப்பதும், அது தன்னுடைய தேசிய நலனை பாதுகாப்பதும் கருங்கடல் ஊடான கடற்பாதையை தக்க வைப்பதன் மூலம் தனது வர்த்தகத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதும்தான்.
ஆகவே இப்போது வெனிசுவேலாவின் ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்வதற்கு எதிராக நான்கு நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளும் எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்காமல் என்பது “வலியது மெலியதை வருத்தும் மெலியது வலியதிலிருந்து தூரவிலகி இருப்பதே தப்பிப்பிழைக்க ஒரேவழி“. என்ற அரசியல் தத்துவம் உலக மக்களுக்கு போதிக்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 24 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.