ஈரானின் திட்டமிட்ட வான்வழி தாக்குதல்களால் மீண்டும் பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
மத்திய கிழக்கில் தொடரும் போர் இன்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் ஏவிய ட்ரோன்கள், ஒட்டுமொத்த உலகையுமே அதிர வைத்துள்ளன.
நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்கு மாகாணத்தை நோக்கி வந்த இரண்டு ட்ரோன்களை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

அதேபோல், குவைத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஊடுருவ முயன்ற 6 ட்ரோன்களை அந்நாட்டு நேஷனல் கார்டு அதிரடியாக அழித்துள்ளன.
மேலும், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி செல்போன்களுக்கு 'மிசைல் அலர்ட்' எச்சரிக்கைகளை அனுப்பி அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படை முறியடித்து வருவதாக அமீரகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட இலக்கு
இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், "எந்தக் காரணமுமே இல்லாமல் திட்டமிட்டு நாங்கள் இலக்கு வைக்கப்படுகிறோம். ஈரானுக்கு எதிரான எந்தத் தாக்குதலிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்ற போர்வையில் ஈரான் நடத்தும் இந்தத் தாக்குதல்கள் தேவையற்றவை என அமீரகம் சாடியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அந்த நாட்டின் மீது கடந்த 28 ஆம் திகதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்திய இந்த இராணுவ அதிரடியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான்,இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.