ஈரானை தாக்கினால்... களமிறங்கவுள்ள ஆயுத படைகள்! ஆபத்தின் விளிம்பில் அமெரிக்கா
ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர்
ஈரானை தாக்கும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.
மேலும் போர் விமானங்களை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள விமான தளங்களில் குவித்து வருகிறது.

இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி
ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல், அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கலாம் என ஈரான் குற்றம்சாட்டுகிறது.

ஈரானையொட்டி கடல் பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பல் என்று அறியப்படும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
இதனால் ஈரானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரானும் தயார் நிலையில் உள்ளது.
ஈராக் குழு
இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஒரு குழுவினர் களமிறங்கி உள்ளனர். அமெரிக்காவை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக ஈராக்கில் செயல்பட்டு வரும் கதாயிப் ஹெஸ்புல்லா (Kataib Hezbollah) அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கதாயிப் ஹெஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் வெள்ளை நிற துணிகளை அணிந்து கொண்டு தற்கொலை படை தாக்குதலுக்கான ஆவணங்களில் கையெழுத்திடும் காணொளிகள் தற்போது வெளியாகி உள்ளது.

ஈரானை பாதுகாக்கவும், பெரிய மோதலுக்கான தயாரிப்பாகவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஈரானுக்கு ஆபத்து வரும் பட்சத்தில் பெரிய போருக்கு தயாராக வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு கதாயிப் ஹெஸ்புல்லா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு சிக்கல்
ஈராக் ஜனாதிபதி சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா, பிரித்தானியா கைகோர்த்தபோது இந்த கதாயிப் ஹெஸ்புல்லா அமைப்பு உருவானது.
சதாம் உசேன் அமெரிக்க படைகளால் பிடிக்கப்பட்டு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அவர் 2006ல் டிசம்பர் 30ல் தூக்கிலிடப்பட்டார்.

இந்த கதாயிப் ஹெஸ்புல்லா அமைப்பு ஈராக்கின் மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவால் ஏற்கனவே பயங்கரவாத பட்டியலில் சேர்க்கபபட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வீரர்கள், அவர்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து இந்த கதாயிப் ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது.
இப்போது ஈரானுக்கு ஆதரவாக இந்த அமைப்பு களமிறங்குவதாக கூறியிருப்பது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.