எரிபொருள் விலை குறைக்கப்படும்.. ஆனால் இப்போதல்ல! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனினும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் குறிப்பிட்ட காலப்பகுதியை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒருவித நிச்சயமற்ற நிலைமை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உலக சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் நன்மைகளை மக்களுக்கு நேரடியாகக் கடத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும்.
நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை எவ்வித தடையுமின்றி சீராக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் மக்களுக்கு இந்த எரிபொருள் நிவாரணங்களை வழங்குவது அவசியமாகும்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. ஒருவித நிச்சயமற்ற நிலைமையே நீடிக்கின்றது.
எனினும், இரு தரப்பினரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் பணிகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அதிகாரபூர்வமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை இந்த உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் உலகப் பொருளாதார நிலைமை சாதகமான முறையில் மாறும் என நம்பப்படுகின்றது.
அந்தச் சாதகமான சூழ்நிலையின் நல்ல பலன்கள் எமது நாடு போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும் பட்சத்தில், அதன் நன்மைகள் நிச்சயமாக மக்களுக்கு வழங்கப்படும். இந்த மாதத்துக்காக முற்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளன. மேலும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் மாத்திரமே வர வேண்டியுள்ளது.

தற்போதும் கூட திறைசேரியிலிருந்து கணிசமான அளவு தொகையை மானியமாக வழங்கித்தான் தற்போதைய எரிபொருள் விலை இந்த மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது.
ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட எரிபொருள் மானியப் பொதிக்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியக் காலம் முடிவடைகின்றது.
தற்போது மாதத்தின் நடுப்பகுதி என்பதால் உலகச் சந்தை மாற்றங்களைச் சாதகமாக உற்றுநோக்க வேண்டியுள்ளது. எனவே, தற்போதே அவசரப்பட்டு தீர்மானங்களை எடுத்து மாத இறுதியில் என்ன நடக்கும் என்று கூறுவது நியாயமற்றது" என குறிப்பிட்டுள்ளார்.