உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கதிரை சின்னத்தில் களமிறங்க சுதந்திரக் கட்சி தீர்மானம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி, வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்கள் வினவியபோது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“ஸ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமும் இடம்பெற்றது.
மறுசீரமைப்புக் குழு
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 341 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவொன்றும், மறுசீரமைப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும். அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
பிரச்சினைக்குத் தீர்வு
கூட்டணி தொடர்பில் சில தரப்புக்களுடன் பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் என்ற ரீதியில் சாமர சம்பத் தஸநாயக்க நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
கதிரை சின்னத்திலேயே இம்முறை தேர்தலில் களமிறங்குவோம். எமது கூட்டணி சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதைப் புதிய ஜனநாயக முன்னணியிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
