மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை
முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நடிகை ரிது ஆகர்ஷா முற்றாக மறுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ஊடாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும். அவை திசைதிருப்பக்கூடியவையாகும். அவ்வாறான தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தாக்கல்
600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குறுகிய காலத்திற்குள் குவித்துள்ளதாகக் மெமர்வின் சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் நீதிமன்ற அறிக்கைகளில், ரிது ஆகர்ஷா என்ற பெயரில் DFCC வங்கி கணக்கு ஒன்றிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் DFCC வங்கியில் கணக்கு ஒன்றைப் பராமரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கம் எனக்குச் சொந்தமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத சொத்து
அதை உறுதிப்படுத்தும் வகையில் DFCC வங்கியினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றையும் அவர் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளார்.

மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் பாடசாலை மாணவியாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை ரிது ஆகர்ஷா வலியுறுத்தியுள்ளார்.