தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலி, பூஸ்ஸ, மாத்தறை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் சுசிறிபால மானவடுவின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அவசர பாதுகாப்புக் குழு
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தென்னிலங்கையில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்வதே இந்த அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகள் மற்றும் அமைதியான சூழ்நிலையை தொடர்ந்தும் பேணிச் செல்வது தொடர்பில் எவ்வித தளர்வான கொள்கையும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்துப் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து எத்தகைய அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.