கல்முனையில் நள்ளிரவில் பயங்கரம்! வீடு முற்றாக எரிந்து நாசம்
கல்முனைப் பிரதேசத்தில் நேற்றிரவு( 4)வீடொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
கல்முனை தைக்கா வீதியில் உள்ள வீடொன்றே இவ்வாறு தீயினால் எரிந்து, பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணை
குறித்த வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இன்று முன்னிரவில் நடைபெற்ற குறித்த தீவிபத்தினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குறித்த வீட்டின் தீப்பரவில் தொடர்பில் கல்முனை மாநகர சபை தீயணைப்பு வண்டிக்கு தகவல் அளித்தும் குறித்த வண்டியின் வருகையில் தாமதம் நிலவியதாக குறிப்பிடப்படுகின்றது.
மக்கள் கடும் விசனம்
கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை(4) மாலை ஏற்பட்ட இத்தீ விபத்தையடுத்து கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன.

எனினும், ஒரு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீயணைப்பு வாகனங்கள் நீரைச் சீரமைத்துத் தயார் நிலைக்கு வருவதற்குள் குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகிவிட்டது. "அவசர காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதியானது.
உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் இவ்வாறான நீர் பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் ஏற்படுவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது" என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலதிக தகவல்- ஷிஹான் பாரூக்