தனது கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2024இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது அரசாங்கம் எந்தவொரு புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தவில்லை எனக் கூறுவதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் மூன்று புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், நடைமுறையிலுள்ள ஏழு வரிகளை அதிகரித்துள்ளதாகத் சுட்டிக்காட்டினார்.
சேவை ஏற்றுமதி வருமானத்திற்கான 15வீத வருமான வரி, டிஜிட்டல் சேவைகளுக்கான 18வீத VAT வரி மற்றும் சில தொழில்முறை சேவை செலுத்துதல்களுக்கான 5 வீத தடுத்து வைப்பு வரி (withholding tax) ஆகியவை இந்த புதிய வரி நடவடிக்கைகளில் அடங்கும் என பெரேரா தெரிவித்தார்.
புதிய வரிகள்..
அத்துடன் வட்டி வருமானம், மூலதன இலாபம், நிதிச் சேவைகள், மதுபானம், புகையிலை மற்றும் சூதாட்ட வணிகங்கள் மீதான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் நிலையில், இந்த மாற்றங்கள் குறித்து அவருக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் வரிகள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுவதாகச் சாட்டினார்.
மேலும், பெறப்பட்ட வருவாயை முழுமையாகப் பயன்படுத்தத் தவறிய அதேவேளையில் குடிமக்கள் மீதான வரிப் சுமையை அரசாங்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அண்மையில், தனது நிர்வாகம் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், நடைமுறையிலுள்ள சில வரிகளைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்தான வருமானத்திற்கான 15 வீத வரி, வட்டி மீதான தடுத்து வைப்பு வரி உயர்வு மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான VAT வரி விரிவாக்கம் உள்ளிட்ட பல மாற்றங்களை அதிகாரப்பூர்வ பொருளாதார மற்றும் வரிப் பதிவுகள் உறுதிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.