கைநழுவிய ட்ரம்பின் அதிகாரம் ‘VETO’ ஆயுதத்துடன் களமிறங்கும் ட்ரம்ப்
அமெரிக்காவின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதுடன், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், ட்ரம்பின் ஆட்சிக்காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் அவரது அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவு
பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 ஆசனங்களுக்கும், செனட்டில் உள்ள 100 ஆசனங்களில் 35 ஆசனங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
மேலும், 36 மாநிலங்களுக்கான ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் இடம்பெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, செனட்டில் ஜனநாயகக் கட்சி 53 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அதேவேளை, பிரதிநிதிகள் சபையில் 220 ஆசனங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மைக்குத் தேவையான 218 ஆசனங்களையும் கடந்துள்ளது. இதன் மூலம் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தலில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக வரிகள் மற்றும் ஈரானுடனான அமெரிக்கப் போர் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்ந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குடியரசுக் கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்பின் செல்வாக்கு
ட்ரம்பின் செல்வாக்கு மதிப்பீடும் அண்மைக் காலங்களில் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால், ட்ரம்பின் சட்டமூலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், அவரது நிர்வாகத்திற்கு எதிராக விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, செனட்டின் கட்டுப்பாட்டை இழந்துள்ளமை ட்ரம்புக்கு மேலும் சவாலாக அமையும். ஏனெனில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முக்கிய அரச அதிகாரிகளுக்கான நியமனங்களை உறுதிப்படுத்துவதில் செனட்டுக்கு முக்கிய அதிகாரம் உள்ளது.
சிவப்பு நிறத் தொப்பி
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தடுக்கத் தனது ஜனாதிபதி வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.
தனது Truth Social சமூக வலைத்தளத்தில் 'Veto' என எழுதப்பட்ட குடியரசுக் கட்சியின் சிவப்பு நிறத் தொப்பியின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மறுபுறம், தேர்தல் தோல்வி தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தைச் சிறப்பாக முன்னெடுத்ததாகக் குறிப்பிட்டதுடன், குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்கான பொறுப்பையும் அவர்கள்மீது சுமத்தியுள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள், ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க அரசியலில் புதிய அதிகாரப் போட்டிக்கு வழிவகுக்கும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.