வங்கிக் கணக்கு திறக்க இனி TIN தேவையில்லையா.. வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் இல்லாதவர்களும் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கவும் முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
TIN இலக்கம்
நிதி அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ள போதிலும் அதற்கான சான்றிதழை வைத்திருக்காதவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தங்களுடைய TIN இலக்கத்தை மாத்திரம் வழங்கி குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை, இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்களும் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.
புதிய அறிவிப்பு
இதற்காக அவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம், முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது அதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்கோ தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரால் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கான சேவைகளைத் தாமதப்படுத்தவோ அல்லது மறுக்கவோ கூடாது என்றும் நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.