ஜனாதிபதியின் சொத்து விபரங்களில் எழுந்துள்ள சர்ச்சை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த ஆண்டுக்கான சொத்து விபரங்களில் பாரியளவில் மாற்றங்கள் பதிவாகவில்லை என்ற போதிலும் அவரது வாகனம் தொடர்பில் தெளிவற்ற பதிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இந்த ஆண்டிற்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலை கடந்த ஆண்டின் விபரங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை எனினும் சில மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு 15 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு, கடந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதியின் 'டொயோட்டா ஹைலக்ஸ்' வாகனம் புதிய சொத்து விபரப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.
பெரிய தொகை வைப்பிலில்லை..
கடந்த ஆண்டின் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் இம்முறை காணப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இது கருதப்படுகின்றது. அந்த வாகனம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதா அல்லது வேறு நபருக்கு மாற்றப்பட்டதா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
அது தொடர்பில் எவ்வித தகவலும் இதில் குறிப்பிடப்படாததுடன், ஜனாதிபதியின் வங்கி கணக்குகளிலும் அதுபோன்ற பெரிய தொகையிலான பணம் எதுவும் வைப்பிலிடப்பட்டதாக அவதானிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அறிக்கையின்படி, ஜனாதிபதியின் ஒரே வருமான மூலமாக அவரது ஜனாதிபதி சம்பளம் மட்டுமே உள்ளது. அனைத்து கொடுப்பனவுகளுடனும் சேர்த்து அவரது வருடாந்த வருமானம் 3,081,624 ரூபாவாகும்.
இக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் மனைவியோ அல்லது மகனோ எவ்வித வருமானத்தையும் ஈட்டவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மகனிடம் கையில் 5,000 ரூபாயும், அவரது வங்கிச் கணக்கில் 2,500 ரூபாயும் மட்டுமே இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மனைவியின் வங்கிக் கணக்கில் 321,888 ரூபாய் மீதியாக இருப்பதுடன், அவரிடம் கையில் 35,000 ரூபாய் பணம் இருந்துள்ளது.

கடந்த ஆண்டின் அறிக்கையில் ஜனாதிபதியின் மனைவிக்குச் சொந்தமான காணி மற்றும் வீட்டின் பெறுமதி 40 மில்லியன் ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், புதிய அறிக்கையில் உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதியே பதிவு செய்யப்பட்டுள்ளதால், 2006 ஆம் ஆண்டின் உறுதித் திகதிக்கமைய அச்சொத்தின் பெறுமதி 5 இலட்சம் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியின் பெயரில் எந்தவொரு கடன்களோ அல்லது ஏனைய நிதிசார் பொறுப்புக்களோ எதுவுமில்லை என சர்வதேச சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டு 9ம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து பொறுப்புக்களின் விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை