இலங்கையில் புதிய வரி நடைமுறையால் பாரிய மோசடி - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை - பல மில்லியனை இழந்த நபர்
இலங்கையில் தனிநபர்களுக்கான வரி நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட சமூக வலைத்தளப் பயனர் ஒருவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது 70 வயதான தந்தையிடம், வங்கி பிரதிநிதிகள் போல் தோன்றிய மோசடியாளர்களிடம் 4.6 மில்லியன் ரூபாயை இழந்துள்ளதாக சமூக வலைத்தள பயனர் அமில பெர்னாண்டோ கூறியுள்ளார்.
பண மோசடி
தனியார் வங்கியின் சார்பில் வரி கணிப்பீட்டை கையாளுவதாக கூறிய நபரிடம் தனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பை மேற்கொண்டவர் வங்கியின் விபரங்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் OTP கடவுச்சொற்களை கோரியுள்ளார்.
அதற்கமைய, இதுவொரு மோசடி என்பதை உணராமல் அவரது தந்தை அவற்றை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் காரணமாக தனது தந்தையின் கணக்கிலிருந்து 4.6 மில்லியன் ரூபாய் இழக்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள்
அதே வாரத்தில் இது போன்ற மேலும் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தனக்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி அதிகாரிகள் அல்லது அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி நபர்கள் குறித்து, குறிப்பாக முதியவர்கள் விழிப்புடன் இருக்குமாறு பெர்னாண்டோ பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்கள் தொலைபேசி மூலம் OTP எண்கள், PIN இலக்கங்களில் அல்லது வங்கி கடவுச்சொற்களை கோருவதில்லை என்பதை அவர் பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை உடனடியாகத் துண்டித்துவிட்டு, ஏதேனும் கோரிக்கைகளை உறுதிப்படுத்த அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் நேரடியாக தங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.