பரிதாப நிலையில் மகிந்த - ஷிரந்தி : வீடு செல்ல முடியாமல் தவிக்கும் நாமல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரம, கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாமலுக்கு நேற்று பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
நாமல் ராஜபக்சவின் தாய் மற்றும் தந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்ட உடல்நலக்குறைவால் அவதிப்படுவதைக் கருத்தில் கொண்டு பிணை கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிணை வழங்கிய நீதிமன்றம்
அதனை ஒரு சிறப்பு காரணியாக எடுத்துக்கொண்டு அவரைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், இந்த விண்ணப்பத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கொழும்பு, டிரான்ஸ்வர்க் சதுக்கத்தில் உள்ள நிலமொன்றை இந்திய கிரிஷ் நிறுவனத்திற்கு பல்நோக்குத் திட்டத்திற்காக வழங்குவதற்கான பணிகளைச் செய்து கொடுத்ததற்காக 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பெற்றோரின் பரிதாப நிலை
எனினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்ச உடல்நல குறைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம், வீட்டிற்கு சென்றிருந்தார்.
அதேவேளை தாயார் ஷிரந்தி ராஜபக்ச திறந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.