கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை
கொழும்பில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு எரிவாயு விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குழாய் அமைப்பு மூலமாகவே எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனினும், நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தடங்கலின்றி எரிவாயுவை விநியோகிப்பதில் சிரமங்கள் உருவாகியுள்ளன.
எரிவாயு தட்டுப்பாடு
காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் குடியிருப்பாளர்களுக்கு, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே எரிவாயுவை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் நிர்வாக ஊழியர்கள் குறுஞ்செய்தி மூலம் இது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதுவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல முக்கிய நபர்கள் வசித்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தற்போது கையிருப்பில் உள்ள கடைசி தொகுதி எரிவாயுவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எஞ்சியுள்ள எரிவாயுவை பாதுகாத்துக் கொள்ள மின்சார சாதனங்களை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குடியிருப்பாளர்களுக்கு சிக்கல்
இதேபோன்று, நாராஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் இந்த மாதத்திற்கு மட்டுமே போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளது.

டிசம்பர் மாத பயன்பாட்டிற்கு எரிவாயு இல்லாததால் அங்குள்ள ஊழியர்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டர் சேவைகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நேற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.