கபில சந்திரசேன மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைக்குத் தேவையான தடயவியல் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கமளிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், குறித்த அறிக்கைகளை கொழும்பு குற்றப்பிரிவுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக விளக்கமளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
விளக்கம் கோரிய நீதிமன்றம்
அத்துடன், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேன உயிரிழந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட நான்கு வகையான மருந்துகள் தொடர்பான தடயவியல் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஏனைய அனைத்து அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை மேலும் மூன்று மாதங்களுக்கு பாதுகாத்து வைக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் மின்னஞ்சல் ஊடாக அறிவித்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோரப்பட்ட தகவல்கள்
முன்னைய நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் கோரப்பட்ட தகவல்கள் தொடர்பில் பதில்கள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசியிலுள்ள தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனம் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், விசாரணைத் தேவைக்காக e-sim அட்டையை வழமையான sim அட்டையாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது