கொங்கோவில் எபோலா வைரஸ் தீவிர பரவல்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,354-ஐக் கடந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,075 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் உயிரிழப்புகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், இதுவரை பதிவு செய்யப்பட்ட எபோலா பரவல்களிலேயே மிக வேகமான பரவலாக இது மாறியுள்ளதாக சர்வதேச சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் 'புண்டிபுக்யோ' எனும் அரிதான வகையைச் சேர்ந்தது.
தடுப்பூசி
மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வகைகளில் மிகவும் அரிதான இந்த வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது நேரடிச் சிகிச்சைகளோ இல்லை என்பது இதன் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

தடுப்பூசி இல்லாத காரணத்தினால் இந்த வைரஸ் காட்டுத்தீ போலப் பரவி வருவதாக ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் ஆலோசகர் அப்துல்ஸலாமி நசிதி எச்சரித்துள்ளார்.
ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களின் மோதல்கள் நிலவும் கிழக்குப் பகுதியில் இந்த நோய் பரவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை மருத்துவக் குழுக்கள் சென்றடைவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.
தாக்குதல்
நோய் பரவலின் மையப்பகுதியான இடூரி மாகாணத்தில் உள்ள பல மருத்துவமனைகளில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 35க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சில கிராமங்களில் மக்கள் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு இன்றி, சிகிச்சை மையங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தடுப்புப் பணிகள் முடங்கியுள்ளன.