ஈரான் அணுசக்தி விவகாரம்… உலக அரங்கில் வெடித்த புதிய மோதல்
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) மூலம் அந்நாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்க அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குச் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஊடாகக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஈரானை ஐநா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்கும் இத்தகைய நடவடிக்கை சட்டபூர்வமான அடிப்படையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கம்
அத்துடன், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண்பதாகக் கூறும் நாடுகளின் கூற்றுக்கு இது முரணாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானின் அணுசக்தி மையங்களை ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதைக் சுட்டிக்காட்டி, இவ்விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்குமாறு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆளுநர் சபையைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் ஈரான் ஆய்வுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்றும் சாடியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானிய அணுசக்தி மையங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களே, ஈரான் சர்வதேச ஆய்வாளர்களுக்கு அனுமதி மறுத்தமைக்கு முதன்மையான காரணம் என இந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, பொறுப்புள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் விளைவுகளைக் கவனத்தில் கொண்டு, குறித்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.