அரசாங்கத்திடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
அரச சொத்துக்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை பிற்போடுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியை தணிக்கும் நடவடிக்கையாக அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க தாம் முன்மொழிவதாக ராஜபக்ச கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
நாட்டில் தேர்தல் ஒன்றின் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம், அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெறும் ஆணையின்படி கையாள முடியும்.
எனினும், சில தேசிய சொத்துக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் எந்தவொரு மறுசீரமைப்பும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் தேசிய பாதுகாப்புக்கு இசைவான முறையில் கலந்தாலோசித்து நடைபெற வேண்டும்.
இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் பிடிவாதமான அணுகுமுறையை தனியார் மயமாக்கும் திட்டத்தில் கொண்டிருப்பதாக ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாம் நாட்டை ஆட்சி செய்த போது பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது என்றும் தனியார்மயம் குறித்த விவாதம் கூட நடைபெறவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |