அரசியல் கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன (Maithripala Sirisena) அரசியல் கட்சியொன்றை விலைக்கு வாங்குவதற்கான இரகசிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரான மைத்திரிபால சிரிசேன, அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா, மஹிந்த அமரவீர உள்ளிட்ட ஐந்து பேரை கட்சியில் இருந்து தான்தோன்றித்தனமாக நீக்கப் போய், தற்போது கட்சியின் தலைமைப் பதவியை இழந்துள்ளார்.
அத்துடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிரிசேன என்று சுதந்திரக் கட்சியும் இரண்டு பிரிவுகளாக அணிபிரிந்துள்ளது. எனினும் மைத்திரிபால சிரிசேன கட்சியின் தலைமைப் பதவியை வகிக்க நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
நீதிமன்ற தடை உத்தரவு
அதனையடுத்து பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அதற்கு மேலாக கட்சியின் இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்ட சாரதி துஷ்மந்த மித்ரபாலவையும் நீதிமன்றம் விட்டு வைக்கவில்லை. அவர் செயலாளர் பதவியை வகிக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்ற தடைகளுக்கு மத்தியில் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் அனைவருக்கும் நீதிமன்றத் தடை தொடர்ந்து வருகிறது.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்ட ரீதியான அங்கீகாரம் அமைச்சர் நிமல் சிரிபால தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்திரிபால சிரிசேன நேற்றைய தினம், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை விட்டும் நிரந்தரமாக விலகி, தனது சார்பு அணியின் செயற்குழுவைக் கூட்டி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை தலைவராக அறிவித்திருந்தார். கீர்த்தி உடவத்த பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைத்திரியின் தலைமையின் கீழ் தற்போதைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி செயற்பட்டாலும், அதன் யாப்பின் பிரகாரம் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் உள்ளவரே அதன் தலைவராகவும் இருப்பார் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மைத்திரி அணிக்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் நீதிமன்ற தடைகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.
குறித்த கட்சியை பெயர்மாற்றம் செய்து அதன் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை நியமித்து, ஜனாதிபதி வேட்பாளராக அவரை களமிறக்க மைத்திரிபால உத்தேசித்துள்ளார்.
இதற்கிடையே நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |