இதற்காகவே விடுமுறை...! அரச ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட தீர்மானம்
அரசு ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது இதற்காகவே அரசாங்கம் வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று(17.03.2026) இடம்பெற்ற எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை வழங்கியதற்கான காரணம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தற்போது சுமார் 45,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 15 லிட்டர் என்ற அடிப்படையில் விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்.

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை முறையாக விநியோகிப்பதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காகவே அரசாங்கம் ஒரு நாள் விடுமுறையும் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
QR குறியீடு முறையில் உள்ள சிக்கல்கள், குறிப்பாக இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை வாகன உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பதிவேற்றப் பிரச்சினைகள் இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும்.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு, இலங்கை போக்குவரத்துச் சபையின் (CTB) ஊடாக அடுத்த 2-3 நாட்களில் விசேட QR நடைமுறை மூலம் எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எரிபொருளைப் பயன்படுத்துமாறும், தேவையற்ற சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது ஒரு கப்பல் வருகை தந்து எரிபொருள் இறக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri