அரசாங்கம் பௌத்த மதத்தை அழிக்க முயற்சி! தயாசிறி குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பௌத்த மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
பௌத்த மதத்தின் முக்கிய பீடங்களான மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களுக்கு எழுதிய கடிதமொன்றிலேயே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
குறித்த கடிதத்தில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, ”சுதந்திரமடைந்த காலம் தொட்டு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த சம்பிரதாயத்தை இந்த அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது.
அதன் ஒருகட்டமாக பௌத்த சாசன அமைச்சு தற்போதைக்கு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் விகாரை மற்றும் தேவாலயங்களுக்கான சட்டங்களை மீறி தமக்கு நெருக்கமானவர்களை பஸ்நாயக்க நிலமே பதவிகளில் நியமித்துக் கொள்கின்றது. அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் பெரஹர நிகழ்வுகளும் தடைப்படலாம்.
இப்படியான நிலையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் முன்வர வேண்டும்” என்றும் தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



