சமையல் எரிவாயு தட்டுப்பாடு : அரசாங்கத்தை சாடிய ஹர்ஷ டி சில்வா
இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பல குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அனைவராலும் PickMe Food, Uber Eats போன்ற உணவு விநியோக சேவைகளைப் பயன்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அவர், பல குடும்பங்கள் மூன்று வேளை உணவைக்கூட சிரமத்துடன் பெற்றுக்கொள்ளும் நிலையில், வீட்டில் சமைப்பதற்கான எரிவாயுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விநியோகப் பிரச்சினை
குறிப்பாக, லாப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைக்காதமை குறித்து அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், கோதுமை மா, பாண் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எரிவாயு தட்டுப்பாடும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Laugfs நிறுவனத்தின் துபாயைத் தளமாகக் கொண்ட துணை நிறுவனமொன்று ஈரானிய எரிசக்திப் பொருட்கள் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளுக்காக அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளானதாகக் கூறப்படும் விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதே நிலைமை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏற்பட்டிருந்தால் JVP போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் என்றும் விமர்சித்த ஹர்ஷ டி சில்வா, எரிவாயு விநியோகப் பிரச்சினைக்கு அரசாங்கமும் பொறுப்பான அமைச்சரும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு