உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்
உள்நாட்டு இறைவரித்திணைக்களம், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு தேவையற்ற வருகைகளை தவிர்க்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையவழியிலும் சமர்ப்பிக்கலாம் என்றும் திணைக்களம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கட்டாயமாக்கப்பட்டுள்ள TIN எண்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2024 ஜனவரி 1 முதல் TIN எண்ணைப் பெறுவது சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2026 நவம்பர் 1 முதல், எட்டு குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் நந்தன குமார தெரிவித்தார்.
வங்கி கணக்குகளைத் திறப்பது, கட்டிடத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவது, மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வது மற்றும் மோட்டார் வாகன உரிமங்களைப் புதுப்பிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், நிலம் மற்றும் சொத்துப் பதிவு, வணிகப் பதிவு, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை மாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கும் இந்த எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, TIN சான்றிதழ்களைப் பெறுவதற்காகத் திணைக்கள அலுவலகங்களுக்கு வரும் நபர்கள், எட்டு குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஒன்றிற்கு சான்றிதழ் தேவைப்பட்டால் மட்டுமே உரிய பிரிவுகளுக்குச் செல்ல வேண்டும் என்று திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
தேவையற்ற பதற்றமோ அவசரமோ கொள்ளத்தேவையில்லை என்றும் இந்த செயல்முறையைத் திறமையாக நிர்வகிக்க பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
TIN சான்றிதழ்களுக்கு இணையவழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும், சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டியிருப்பதால் இந்த செயல்முறைக்கு சிறிது காலம் ஆகும் என்றும் நந்தன குமார மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், TIN எண் உருவாக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் பிராந்திய அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை என்றும், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய சான்றிதழ் தபால் மூலம் அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பெறப்பட்ட சான்றிதழை, TIN எண் தேவைப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பின்னர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.