ஆளும் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை!
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் இரண்டு முக்கிஸ்தர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சொத்துச் சேர்த்ததாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இருவருக்கும் எதிராக பூரண விசாரணையை ஆரம்பிக்க, லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி’ என்ற அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தது.
குறிப்பிட்ட சொத்துக்கள் சேகரிக்கப்பட்ட விதம் குறித்து நிதியியல் மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு இந்த முழுமையான விசாரணையை ஆரம்பித்தது.
முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பிரதி அமைச்சரின் சொத்துக்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது அவதானிக்கப்பட்ட சில பிரச்சினைகளின் அடிப்படையில், இந்த பூரண விசாரணையை ஆரம்பிக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றச்சாட்டுக்குள்ளாகிய இரண்டு அரசியல்வாதிகளும் இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்த சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் பின்னர் வழங்கப்பட்ட அறிக்கைகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் மற்றும் பொருத்தமற்ற தன்மைகளை கருத்திற்கொண்டு இந்த பூரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துச் சேர்த்ததாகத் தெரிவித்து, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, சுனில் ஹந்துன்னெத்தி, நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் முன்னாள் அமைச்சர் பிரேமசிறி குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராக விசாரணையொன்றை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி குறித்த அமைப்பின் தலைவர் சாமுனி காமந்த துஷார முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி சாமுனி காமந்த துஷாரவிடம் ஆணைக்குழு வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri