தமிழரசுக் கட்சியின் செயலாளர் தெரிவில் சர்ச்சையை தோற்றுவித்த சுமந்திரனின் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரனின் மத்திய குழு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பே தமிழரசுக் கட்சியின் செயலாளர் தெரிவில் சர்ச்சைநிலை ஏற்பட காரணம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு விளக்கமளிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தெரிவு நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுச் செயலாளர் தெரிவில் இழுபறி நிலை ஏற்பட்டதோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோருக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் சர்ச்சை : இரண்டு கை உயர்த்தியவர்களால் பிற்போடப்பட்டது தேசிய மாநாடு
செயலாளர் பதவி
இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் நிலை தொடர்பில் கே.வி தவராசா மேலும் தெரிவித்ததாவது,
தமிழரசுக் கட்சியின் செயலாளர், பொருளாளர் மற்றும் உபதலைவர் பதவிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்ய வேண்டும் என்பதே பொதுக்குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையானவர்களில் விருப்பமாக இருந்தது.
எனினும் மேற்கூறப்பட்ட மூன்று பதவிகளுக்கும் தேர்தல் நடத்தமுடியாது என தெரிவித்ததன் காரணமாக, செயலாளரை மாத்திரம் தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தேர்தல் நாளையதினம் நடத்தப்படும் எனவும், தற்போது நடத்துவதற்கு நேரம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், மாவை சேனாதிராஜாவின் கருத்தை கேட்டவுடன் 340 பேரில் 140 பேருக்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர்.
சுமந்திரனின் செயற்பாடு
இதன்போது உள்நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன் மத்திய குழுவின் கருத்தை ஆதரிப்பவர்கள் மாத்திரம் கையை உயர்த்துங்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் சுமந்திரனின் கருத்துக்கு இணங்க 112பேர் கைகளை உயர்த்தினர். பின்னர் மத்திய குழுவின் கருத்துக்கு எதிராக 104பேர் கையை உயர்த்தியதாக சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்கமைய இறுதியாக மத்திய குழுவின் செயற்பாட்டை பொதுக்குழு ஆதரிக்கின்றது என அறிவித்து சென்றுவிட்டார். மேலும் குகதாசன் செயலாளர் எனவும் அறிவித்திருந்தார்.
இதன்போதே பொதுக்குழுவில் சர்ச்சை தொடர ஆரம்பமாகியது. பொதுக்குழுவில் பெரும்பான்மையான அங்கத்தவர்கள் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும், குறித்த தெரிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினர், மொத்தமாக 350 பேருக்கும் அதிகமானோர் வருகை தந்தனர் எனவும், அவர்களில் பலர் வெளியேறியவுடன் இவ்வாறான ஒரு தெரிவை முன்மொழிந்தமை ஏற்றுக்கொள்ள முடியாமலும், சந்தேகத்திக்கிடமாகவும் இருப்பதாகவும் காரணம் கூறியுள்ளனர்.
மாவை சேனாதிராஜாவின் குறிக்கீடு
இதன்போது குறுக்கிட்ட மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் மாநாட்டை தள்ளிவைப்பதான அறிவிப்பை உடனடியாக முன்வைத்தார்.
இந்நிலையில் மாநாடு தள்ளிவைக்கப்பட்டதை எண்ணி பெரும்பாலானோர் மகிழ்வோடு வெளியேறினார். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை தற்போதைய தெரிவை பொதுச்சபை ஏற்றுக்கொண்டது என்று.
இதன்போது மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய நான்,மாநாட்டை தள்ளிவைத்ததாக அறிவித்த நீங்கள் தெரிவு தொடர்பில் என்ன பதிலை வழங்கவுள்ளீர்கள்? என்ற கருத்தை முன்வைத்தேன்.
இதற்கு பதிலளித்த மாவை, செயலாளர் தெரிவானது நடைபெற்று முடிந்தது எனவும், அதற்கு மாற்றுக்கருத்து இல்லை எனவும் கூறினார்.
இந்நிலையில் மீண்டும் கருத்து தெரிவித்த நான்,
செயலாளர் தெரிவு நடைபெற்று முடிந்திருந்தால் மாநாட்டை ஏன் தள்ளி வைத்தீர்கள்? என மீண்டும் கேள்வி எழுப்பினேன்.
மேலும் தெரிவு என்பது முழுமைபெறாத காரணத்தினாலேயே மாநாட்டை தள்ளி வைத்துள்ளீர்கள் என தெரிவித்தேன்.
இவ்வாறான கருத்துக்களுக்கு அமைய மத்திய குழுவின் திட்டத்திற்கு இணங்க தலைவர் தெரிவு இடம்பெற்றால் அது சுதந்திரமான தெரிவாக அமையாது.
மாற்றங்கள் இல்லாத தமிழரசுக் கட்சி
இதன்போது என்னிடம் கேள்வியெழுப்பிய சிலரிடம், கட்சியில் இருந்து விலகிவிடுவேன் எனவும், என்னுடைய காலத்தை இதனுள் வீணடிக்க விரும்பவில்லை எனவும் வெளிப்படையாக கூறியிருந்தேன்.
14 ஆண்டுகள் ஆகியும் எவ்வித மாற்றங்களும் கட்சிக்குள் இடம்பெற்றமை வேதனையளிக்கின்றது.
இதன்போது கட்சியின் உறுப்பினராகிய ரத்னாவடிவேலு, கட்சி பிளவடைந்துவிட்டதாகவும், எதிரான கருத்துக்களை தான் முன்வைப்பதாகவும் என்னை சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த நான், “வைத்திய ஆலோசனைகளையும் மீறி நான் எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். இல்லையென்றால் எனது பதில்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தாவிட்டால் அது தவறான விடயமாக மாறிவிடும்.
மேலும் வடக்கு கிழக்கு இணைந்ததுதான் தாயகம். இதையே எனது நோக்கமாக கொண்டுள்ளேன். எனக்கும் சுமந்திரனுக்கும் எவ்வித தனிப்பட்ட மோதல்களும் இல்லை.
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பல கருத்துக்களை அவர் முன்வைத்ததன் காரணமாக, அதை எதிர்க்கும் முகமாக எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேன்.
14 வருடங்களை கடந்தபோதும் தமிழரசுக் கட்சி எனது விலாசம் அல்ல எனவும், அரசியல் எனது வாழ்வாதாரம் அல்ல எனவும் வலியுறுத்தினேன். என்னை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்திற்காக மாத்திரமே கட்சியில் தொடர்ந்து எனது பங்குகளை வகிக்கின்றேன்.
பக்கச்சார்பான அங்கத்தவர்கள்
நான் இல்லாத நேரத்தில் என்னைப்பற்றி கட்சிக்குள் பேசுவது மிகவும் பிழையான விடயம் என்பதையும் இங்கு முன்வைத்தேன்.
பிரதான குழப்பநிலை என்னவென்றால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டதன் காரணத்தினால் எவ்வித தெரிவும் இடம்பெறவில்லை என ஒரு சாராரும், மாநாடு மாத்திரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தெரிவு என்பது உறுதி என இன்னொரு சாராரும் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் வெளியேறினார்.
இதன்போது மாவை சேனாதிராஜாவிடம், மத்திய குழுவின் செயற்பாடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 14 ஆண்டுகளாக எனது அரசியல் போக்குகளை வீணடித்துவிட்டேன்." என ஆதங்கமாக தெரிவித்திருந்தேன்.
எமது கட்சியில், குறிப்பாக சுமந்திரன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் தமிழ்த்தேசியத்திற்கு ஏதோ ஒருவகையில் தேவையானவர்கள். அதனை நான் இங்கு முன்மொழிந்தேன்.
ஆனால் சிறீதரன் சார்பில் எவ்வித கருத்துக்களும் வெளிப்படுத்ப்படவில்லை. எனது நிலைப்பாட்டின்படி கட்சியில் ஏனைய பொறுப்புக்களுக்கு தெரிவென்பது இடம்பெறாது.
மத்திய குழுவின் செயற்பாட்டிற்கு அமைய ஒரு கூட்டத்தை அமைத்து தெரிவு இடம்பெற்றுவிட்டது என்ற அறிவிப்பையே வெளிப்படுத்துவார்கள்.
பக்கசார்பாக செயற்படும் அங்கத்தவர்களை வைத்துக்கொண்டு ஜனநாயகமாக முடிவை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனது வெளியேற்றத்தையே அவர்கள் விரும்பினார்கள். நானும் தற்போது வெளியேறிவிட்டேன்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |