தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் : மீண்டும் குழப்பம்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அது தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குகதாசன் தெரிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக செயலாளர் தெரிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளையதினம் நடைபெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடு மாவை சேனாதிராஜாவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செயலாளர் தெரிவு உத்தியோகபூர்வமாக இன்னும் நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொதுச் செயலாளர்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள் - சசிகரன் புண்ணியமூர்த்தி, பதுர்தீன் சியானா
புதிய வேட்பாளர்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காக அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஷ்வரனும் போட்டியிடவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே குறித்த பதவிக்காக, சிறீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது தானும் போட்டியிடவுள்ளதாக கோடீஸ்வரன் அறிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திறந்த வாக்கெடுப்பு மூலம் பொதுச் செயலளார் தீர்மானிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் கிழக்கு மாகாண விவசாயத் துறை அமைச்சர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருக்கின்றார்.
அதேசமயம், கூட்டம் நடைபெறும் இடத்தில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோர் வெவ்வேறாக நின்று பொதுமக்களுடன் கலந்துரையாடி வருவதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மத்திய குழுவின் தீர்மானம்
குகதாசனை பொதுச் செயலாளராக நியமிப்பதென மத்திய குழு தீர்மானித்திருந்தது.
எனினும் பொதுக்குழு அதனை நிராகரித்து வாக்கெடுப்பு கோர வேண்டும் என கூறிய நிலையில் மீண்டுமொரு விசேட கலந்துரையாடல் கட்சியின் நிர்வாகிகளுடன் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்த வரையில் யாப்பு விதிகளுக்கு அமைவாக பொதுக்குழுவிடமே அதிகாரம் காணப்படுகிறது.
அந்த பொதுக்குழு அங்கீகரித்தால் தான் கட்சியின் ஏனைய பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட முடியும். இப்பொழுது பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலை உருவாகியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காம் இணைப்பு
தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் கடும் குழப்ப நிலை நிலவுவதாகவும், பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வாக்கெடுப்பு கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள்
புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.
பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி.
துணைத் தலைவர்கள் K. V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம், இணை செயலாளர்கள் சாந்தி சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலதிக தகவல்கள் - சசிகரன் புண்ணியமூர்த்தி
மூன்றாம் இணைப்பு
தற்போது நடைபெற்று வரும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் குகதாசன் அணியினருக்கும் வேறு ஒரு அணியினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்
மேலதிக விபரங்கள் - பதுர்தீன் சியானா
இரண்டாம் இணைப்பு
இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
எனினும் இது தொடர்பான முக்கியபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுச் சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலதிக தகவல்கள் - குமார், பதுர்தீன் சியானா
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று இடம்பெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் கடும் போட்டியிருக்கும் என்று கருதப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி யாருக்கு
தமிழரசின் தலைவருக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஏனைய பதவிகளுக்கு இன்று புதியவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
பொதுச்செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஞானமுத்து ஸ்ரீநேசன், சண்முகம் குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோர் அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட வாய்ப்பிருப்பதாக நேற்றுச் செய்திகள் வெளி வந்திருந்தன.
ஆனால், போட்டியில்லாமல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்திலேயே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்றும், மாற்று வேட்பாளர் இருக்கும் பட்சத்தில் தேர்தல், வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றும் குகதாசன் நேற்றிரவு தெரிவித்தார்.
இதேவேளை, ஏகமனதாகவோ அல்லது தேர்தல் மூலமோ எவ்வாறு தெரிவு செய்யப்பட்டாலும்
பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இரா.சாணக்கியன்
உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவப் பதவிக்கான தேர்தலுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில், தமிழரசுக் கட்சின் இன்றைய பொதுக் குழுக் கூட்டம் எதிர்பார்ப்பு மிக்கதாக மாற்றம் பெற்றுள்ளது.
தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |