தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் சர்ச்சை : இரண்டு கை உயர்த்தியவர்களால் பிற்போடப்பட்டது தேசிய மாநாடு
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளயைதினம் இடம்பெறவிருந்த நிலையில் மாவை சேனாதிராஜாவினால் தற்போது தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தெரிவு இன்று இடம்பெற்ற நிலையில், அதில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக தேசிய மாநாடு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செயலாளர் தெரிவு செல்லாது
இன்று காலை முதல் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் இழுபறி நிலை ஏற்பட்டு மாலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோருக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது அதிக வாக்குகளைப் பெற்று குகதாசன் தெரிவு செய்யப்பட்டிருந்த போதும் அதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பொதுச் செயலாளர் தெரிவு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு கைகளை உயர்த்திய நபர்கள்
பொதுச் செயலாளர் தெரிவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் பொதுச் சபையில் கை உயர்த்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது “பொதுச் சபை உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பலர் வாக்களித்தனர்” என்ற காரணத்தை கருத்திற் கொண்டு கால வரையறையற்று கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, மீண்டும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று மாநாட்டை மாவை சேனாதிராஜா ஒத்திவைத்தார்.
பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் கை உயர்த்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சிலர் இரண்டு கைகளையும் உயர்த்தியதாகவும், சுமந்திரன் அதனை கணக்கிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |