வட்டமிடும் யுத்த - உளவு கப்பல்கள்! இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா
பொருளாதார நெருக்கடி, அரசியல் ரீதியான நெருக்கடிகள் என்று தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வருகிறது இலங்கை. இலங்கையிலுள்ள மக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் அடுத்தடுத்து பிரச்சினைகள் வாட்டி வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
கடந்த மாதங்களில் வன்முறை களமாக காணப்பட்ட இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு தற்போது தான் ஓரளவு இயல்பு நிலையை எட்டி வருகிறது.
இவ்வாறானதொரு சூழலில் இலங்கைக்கு உதவி வரும் மிகப்பெரும் பலம்பொருந்திய நாடுகளின் கோபத்திற்குள் சிக்கும் வகையிலான பிரச்சினையொன்று தற்போது இலங்கைக்கு எழுந்துள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள யுவான் வாங் - 5இன் பிரவேசம்
தற்போது பெரும்பாலான ஊடகங்களில் பேசுபொருளாக காணப்படும் சீனாவின் யுவான் வாங் - 5 என்ற உளவுக் கப்பலின் இலங்கை பிரவேசமே இவ்வாறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பலின் வருகையை இந்தியா விரும்பாத நிலை தெளிவாக பல தரப்பினாலும் சுட்டிக்காட்டப்படும் நிலையில் சீனா கப்பலை அனுப்பும் முடிவிலிருந்து பின்வாங்காத நிலையும் இலங்கையை கதிகலங்கச் செய்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதேவேளை சீனாவை கோபப்படுத்திக் கொண்டால், கடன் மறுசீரமைப்பு அல்லது வேறு கடனைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினை ஏற்படும் அதேநேரம் இந்தியாவை கோபப்படுத்திக் கொண்டால் அங்கும் பாரிய பிரச்சினை ஏற்படும் என்கிறார் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதுவே தற்போது இலங்கையின் உண்மையான நிலைமையாக காணப்படுகிறது.
அத்துடன் இந்த சீனக் கப்பல், விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் ஒன்றல்ல. இது அவசரமாக இடம்பெற்ற ஒன்றல்ல. இந்தக் கப்பலை அனுப்புவது குறித்து, சீனா விடுத்த கோரிக்கைக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்தது.
2015இலும் ஏற்பட்டிருந்த பிரச்சினை
இது, எந்த வகையிலான கப்பல் என்பதை வெளிவிவகார அமைச்சு அறிந்திருக்கவில்லையா? குறித்த கப்பலில் அதிநவீன இலத்திரனியல் கட்டமைப்பு உள்ளது. இந்தியா இதனை எவ்வாறு நோக்கும். இந்தக் கப்பல், பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் அல்ல. 2015 இல் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தொடர்பில் இதுபோன்ற பிரச்சினை ஒன்று ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சீனாவின் யுவான் வாங்-5 கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கையால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் தாண்டி இலங்கையிலிருந்து 650 கடல் மைல் தொலைவில் நேற்றைய தினத்திற்கான நிலவரப்படி குறித்த கப்பல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்து வரும் இரண்டு தினங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை யுவான் வாங்-5 வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணைப் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
இதெல்லாம் இவ்வாறு இருக்க பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்கு கராச்சி செல்லும் வழியில், சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணைப் போர்க்கப்பலான PNS Taimur கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கையின் படைகளுக்கு வழங்கவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 உளவு விமானம், இந்தியக் கடற்படையால் மின்னணுப் போர்ப் பணிகள், கடல்சார் கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் பிற பணிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.
இலங்கையில் உள்நாட்டு பிரச்சினைகள் தற்பொழுது தான் ஓரளவு சுமூகமடைந்து ஜனாதிபதி உள்ளிட்ட பதவிகளில் மாற்றங்கள் நடந்து மூச்சுவிடக்கூடிய நிலைமை ஓரளவு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் இரையினை வட்டமிடும் கழுகுகள் போல் இலங்கையையும் இலங்கை கடற்பரப்பையும் உளவு கப்பல்களும், விமானங்களும், யுத்தக் கப்பல்களும் வட்டமிடுவது இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு தலையிடியாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட பலத்த அடியின் காரணமாக பலம்பொருந்திய நாடுகளை மட்டுமல்ல சிறிய நாடுகளை கூட பகைத்துக் கொள்ள முடியாத திரிசங்கு நிலையில் இலங்கை சிக்கியிருக்கிறது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கை போன்ற சிறிய நாடுகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அதன் உள்நாட்டு சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பொருளாதார நிபுணர்களும், அரசியல் அவதானிகளும் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.