இத்தாலி - கெடானியா விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தம்: பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலையிலிருந்து தொடர்ந்து வெளியேறி வரும் சாம்பல் புகை மற்றும் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இத்தாலி - கெடானியாவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலேயே இந்த தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அசௌகரியத்தில் சுற்றுலாப் பயணிகள்
நாட்டின் ஐந்தாவது மிகப்பரபரப்பான விமான நிலையமாக விளங்கும் கெடானியா விமான நிலையத்தின் அனைத்து வருகை விமானச் சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை ஜி.எம்.டீ. நேரப்படி காலை 10.00 மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் உயரமானதும் மிகவும் தீவிரமானதுமான மவுண்ட் எட்னா எரிமலை வழக்கமாக விமானப் போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்ற போதிலும், இந்த முறை கோடைகாலப் பருவகாலத்தில் இதன் சீற்றம் அதிகமாகக் காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.